கோவில்பட்டியில் ஸ்மார்ட் கார்டுக்காக புகைப்படம் பதிவு செய்ய சிறப்பு முகாம்


கோவில்பட்டியில் ஸ்மார்ட் கார்டுக்காக புகைப்படம் பதிவு செய்ய சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 8 Aug 2017 8:30 PM GMT (Updated: 8 Aug 2017 12:27 PM GMT)

புதிய ஸ்மார்ட் கார்டுகள்(மின்னணு குடும்ப அட்டை) வழங்குவதற்காக, குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவு செய்யும் முகாம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில், பழைய ரே‌ஷன்கார்டுகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டுகள்(மின்னணு குடும்ப அட்டை) வழங்குவதற்காக, குடும்ப தலைவரின் புகைப்படம் பதிவு செய்யும் முகாம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

குடும்ப தலைவரின் புகைப்படம்

பழைய காகித வடிவிலான ரே‌ஷன்கார்டுகளுக்கு பதிலாக புதிய ஸ்மார்ட் கார்டுகள் (மின்னணு குடும்ப அட்டை) வழங்கப்பட்டு வருகிறது. பயன்பாட்டில் உள்ள ரே‌ஷன்கார்டுகளில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களும், குடும்ப தலைவரின் செல்போன் எண்ணும் ஏற்கனவே இணைக்கப்பட்டு விட்டது.

கோவில்பட்டி தாலுகாவில் பயன்பாட்டில் உள்ள 65 ஆயிரத்து 504 ரே‌ஷன் கார்டுதாரர்களில் 43 ஆயிரத்து 68 பேருக்கு ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. மீதமுள்ள ரே‌ஷன்கார்டுதாரர்கள் தங்களது குடும்ப தலைவரின் புகைப்படங்களை இன்னும் கொடுக்காமல் இருப்பதால், ஸ்மார்ட் கார்டுகளை தயார் செய்து வழங்க இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம்

எனவே ஸ்மார்ட் கார்டுகளை துரிதமாக வழங்கும் பொருட்டு, கோவில்பட்டி தாலுகா அலுவலகத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சிறப்பு முகாம் நடக்கிறது. இதில் குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவு செய்யாத ரே‌ஷன்கார்டுதாரர்கள், குடும்ப தலைவரின் புகைப்படம் மற்றும் ஏற்கனவே பதிவு செய்த செல்போன் எண்ணுடைய கைப்பேசி ஆகியவற்றை கொண்டு வந்து, புகைப்படத்தை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை கோவில்பட்டி தாசில்தார் ஜான்சன் தேவசகாயம் தெரிவித்து உள்ளார்.


Next Story