தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதாரநிலையத்தை மேம்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த தமிழக அரசுக்கு சட்டமன்ற மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்யும்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்த தமிழக அரசுக்கு சட்டமன்ற மதிப்பீட்டு குழு பரிந்துரை செய்யும் என குழு தலைவர் எம்.நரசிம்மன், எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
மதிப்பீட்டுக்குழுதமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு தலைவர் எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ. தலைமையில், உறுப்பினர்கள் டாக்டர் பரமசிவம்(வேடசந்தூர்), பாஸ்கர்(நாமக்கல்), மனோன்மணி(வீரபாண்டி), ஜெயந்தி பத்மநாபன்(குடியாத்தம்), ராஜா(தாம்பரம்), சுதர்சனம்(மாதவரம்), நந்தகுமார்(அணைக்கட்டு) ஆகியோர் அடங்கிய குழு நேற்று காலை தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள், கலெக்டர் வெங்கடேஷ், கீதாஜீவன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சுகாதார நிலையத்தில் ஆய்வு
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழுவினர் சென்றனர். அங்கு அடிப்படை வசதிகள், பொது பிரிவு, பிரசவ பிரிவு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், ஆஸ்பத்திரியின் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் பராமரிப்பு, உள்நோயாளிகள் படுக்கை அறை உள்ளிட்டவை முறையாக பராமரிக்கப்படுகிறதா? என்பதை கேட்டறிந்தனர். தொடர்ந்து ஸ்டேட் வங்கி காலனியில் ரூ.1 கோடியே 37 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பூங்காவை பார்வையிட்டனர்.
நீர்த்தேக்க தொட்டிதொடர்ந்து தூத்துக்குடி டூவிபுரம் 5–வது தெருவில் மாநகராட்சிக்கான 4–வது குடிநீர் குழாய் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டனர். அப்போது மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் கூறும் போது, மாநகராட்சிக்கு ஒரு நாளுக்கு 52 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை. தற்போது 30 மில்லியன் லிட்டர் தண்ணீர் வருகிறது. இதனால் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ரூ.282.44 கோடி செலவில் 4–வது குடிநீர் குழாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் திட்டம் 84 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 50 ஆண்டுகளுக்கு தண்ணீர் பிரச்சினை இருக்காது. தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, சுத்திகரித்து தன்னோட்ட முறையில் மாநகராட்சியில் உள்ள நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் வருகிறது. அங்கிருந்து வினியோகம் செய்யப்படும் என்று கூறினார்.
அப்போது, மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் திட்டத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, குடிநீர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க குழுவினர் அறிவுறுத்தினார். அதன்பிறகு கணேஷ்நகரில் ரூ.52 லட்சத்து 50 ஆயிரம் செலவில் கட்டப்பட்டு வரும் நகர சுகாதார நிலையம், மடத்தூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் சுகாதார நிலையம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, உதவி கலெக்டர்(பயிற்சி) சரவணன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் போஸ்கோராஜா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
மாப்பிள்ளையூரணி...பின்னர் குழு தலைவர் நரசிம்மன் நிருபர்களிடம் கூறும் போது, ‘மாப்பிள்ளையூரணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இங்கு அதிக அளவில் நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை என்னென்ன வழியில் மேம்படுத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி அரசுக்கு பரிந்துரை செய்வோம். ஸ்டேட்வங்கி காலனியில் பூங்கா பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுறுத்தி உள்ளோம் என்று கூறினார். மாலையில் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் மதிப்பீட்டுக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்.