தூத்துக்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் கீதாஜீவன் தலைமையில் நடந்தது


தூத்துக்குடி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் கீதாஜீவன் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 9 Aug 2017 3:00 AM IST (Updated: 8 Aug 2017 8:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே குடிநீர் கேட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன், எம்.எல்.ஏ, தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்பிக்நகர்,

தூத்துக்குடி அருகே குடிநீர் கேட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன், எம்.எல்.ஏ, தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குடிநீர் தட்டுப்பாடு

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, எம்.சவேரியர்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மக்களுக்கு, ஏரல் அருகே உள்ள வாழவல்லான் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த பல நாட்களாக இந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால் மக்கள் குடிநீர் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இப்பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தங்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய கோரி முத்தையாபுரம் அருகே அத்திமரப்பட்டி விலக்கு பகுதியில் பொதுமக்கள் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கீதாஜவன், எம்.எல்.ஏ.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சுந்தர்நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி லிங்கதுரை, இந்திராநகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி சண்முகையா, தென்றல் நகர் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகி முருகேச பாண்டியன், ஜெயக்குமார், முன்னாள் கவுன்சிலர் மனோகர், முத்தையாபுரம் மஜித், கந்தசாமி, சித்திரைக்கனி, நடேசன் டேனியல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முத்தையாபுரம், முள்ளக்காடு, அத்திமரப்பட்டி, எம்.சவேரியர்புரம், கீதாநகர், அபிராமி நகர், ஆதிபராசக்தி நகர், மகாநகர், சக்திநகர், குமாரசாமி நகர், தங்கமணி நகர் உள்ளிட்ட பல குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் தண்ணீர் வழங்க கோரி கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story