பல்லடம் பகுதியில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் குளறுபடிகள் பொதுமக்கள் அவதி
பல்லடம் பகுதியில் பொதுமக்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பெயர் மற்றும் முகவரிகள் மாறி பெரும் குளறுபடிகள் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
பல்லடம்,
பல்லடம் பகுதியில் பழைய ரேஷன் கார்டுகளுக்கு பதில் புதிய ‘ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்‘ வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் பல கார்டுகளில் பெயர் மற்றும் முகவரிகள் மாறி பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்ப உறுப்பினர்களான மனைவி மற்றும் மகன்களின் பெயர்களும் மாறி உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி துணிநூல் வியாபாரியின் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் கே.என்.ஈஸ்வரமூர்த்தி என்பதற்கு பதில் எஷ்வராணுமுத்தி என்றும், முகவரியில் வடுகபாளையம், பல்லடம் என்பதற்கு பதில் பள்ளாதம், பீ.வாடுகபாலாய் என்றும் தவறாக உள்ளது. மேலும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்களான மனைவி மல்லிகாதேவி, மகன் ஜெய்வெற்றிவேல் என்ற இடத்தில் அங்கம்மாள் ரங்கபோந், சுபா என்ற பெயர்கள் மாறிபோய் உள்ளது.
இதேபோல் பல்லடம் பகுதிகளில் பலரின் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் பெயர் மற்றும் முகவரி குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் மாறி கிடக்கிறது. இதனால் பெயர் மற்றும் முகவரி, குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை மாற்றுவதற்காக இ–சேவை மையங்களை தேடி அலைந்து வருகிறார்கள்.