மதுபான கடை திறக்க எதிர்ப்பு: சட்டசபையை முற்றுகையிட்ட கிராம மக்கள்


மதுபான கடை திறக்க எதிர்ப்பு: சட்டசபையை முற்றுகையிட்ட கிராம மக்கள்
x
தினத்தந்தி 9 Aug 2017 4:30 AM IST (Updated: 9 Aug 2017 2:08 AM IST)
t-max-icont-min-icon

மதுபான கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சட்டசபையை முற்றுகையிட்டனர்.

புதுச்சேரி,

புதுவை திருபுவனை சின்னபேட்–சன்னியாசிக்குப்பம் செல்லும் சாலையில் காவல்நிலையம் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு புதியதாக மதுபான கடை திறக்கப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மதுபான கடை மூடப்பட்டது.

இந்தநிலையில் அந்த மதுபான கடையை திறக்க முயற்சி நடப்பதாக அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மதுபான கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவில் மழை பெய்தபோதும் கொட்டும் மழையிலும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் பொதுமக்கள் நேற்று கலால்துறை அமைச்சரான நமச்சிவாயத்தை சந்தித்து மனு கொடுக்கும் விதமாக சட்டசபைக்கு வந்தனர். ஆனால் அவர்களை ஒட்டுமொத்தமாக சட்டசபைக்குள் செல்ல சபைக்காவலர்களும், போலீசாரும் அனுமதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் சட்டசபை முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுக்கடை திறப்பதற்கு எதிராக கோ‌ஷங்களும் எழுப்பினார்கள். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதன்பின் முக்கிய நிர்வாகிகளை சட்டமன்றத்துக்குள் அனுமதித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் சட்டசபைக்கு சென்று அமைச்சரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களின் இந்த போராட்டத்தினால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story