சோழவரம் அருகே மணல் கடத்தல் போலீசார் விரட்டியதில் மின்வேலியில் சிக்கி ஒருவர் பலி


சோழவரம் அருகே மணல் கடத்தல் போலீசார் விரட்டியதில் மின்வேலியில் சிக்கி ஒருவர் பலி
x
தினத்தந்தி 8 Aug 2017 10:45 PM GMT (Updated: 8 Aug 2017 8:52 PM GMT)

சோழவரம் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடினர். அவர்களில் ஒருவர் மின்வேலியில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

பொன்னேரி,

சோழவரத்தை அடுத்த கொசஸ்தலை ஆற்றில் நேற்று முன்தினம் இரவு லாரிகளில் மணல் கடத்தப்படுவதாக பொன்னேரி வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் சோழவரம் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். போலீசாரை பார்த்ததும் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர்.

அப்போது அவர்களை போலீசாரும், வருவாய்த்துறையினரும் விரட்டிச் சென்றனர்.

இந்த நிலையில் காரனோடை கொசஸ்தலை ஆற்று பாலம் அருகே விவசாய நிலத்தில் காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி ஒருவர் இறந்தார். விசாரணையில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்தவர் சோழவரத்தை அடுத்த இருளிப்பட்டு பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த குமரவேல் (வயது 36) என்பது தெரிய வந்தது. குமரவேல் மணல் கடத்தலில் ஈடுபட்டு போலீசார் விரட்டியதில் தப்பிக்க முயன்று மின் வேலியில் சிக்கி பலியானதாக கூறப்படுகிறது.

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story