விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி


விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி
x
தினத்தந்தி 8 Aug 2017 10:45 PM GMT (Updated: 8 Aug 2017 9:31 PM GMT)

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் 3 அரசு பஸ்கள் ஜப்தி செய்யப்பட்டன.

கிருஷ்ணகிரி,

கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் மேகாதிருகா. இவர் கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் மாதம் 26-ந் தேதி காரில் தனது நண்பர்கள் ஜோயல்ஸ்வரப் மற்றும் நஜீர்உசேன் ஆகியோருடன் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். கிருஷ்ணகிரி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்டேகுப்பம் அருகே சென்ற போது, ஜோலார்பேட்டையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த அரசு பஸ் கார் மீது மோதியது.

இந்த விபத்தில் ஜோயல்ஸ்வரப், நஜீர்உசேன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தீ காயங்களுடன் மீட்கப்பட்ட மேகாதிருகா, கிருஷ்ணகிரி, பெங்களூரு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார். இந்த விபத்து தொடர்பான வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கடந்த 2015-ம் ஆண்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மேகாதிருகாவிற்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடாக ரூ.88 லட்சத்து 54 ஆயிரம் வழங்க வேண்டும் என தீர்ப்பு அளித்தது.

இந்த தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்கவில்லை. இதையடுத்து நிறைவேற்றல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் கடந்த மாதம் 17-ந் தேதி இழப்பீடு தொகையை வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 45 லட்சத்து 94 ஆயிரத்து 27 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனாலும் போக்குவரத்து கழகம் அந்த தொகையை வழங்கவில்லை.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் நின்ற அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது. இதே போல் ஜோயல்ஸ்வரப் குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையாக ரூ.28 லட்சத்து 65 ஆயிரத்து 80-ம், நஜீர்உசேன் குடும்பத்தினருக்கு ரூ.90 லட்சத்து 82 ஆயிரத்து 141-ம் நஷ்ட ஈடு வழங்காததால் மேலும் 2 அரசு பஸ்களை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

இதன் காரணமாக கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

Related Tags :
Next Story