அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காதல் விவகாரத்தில் விபரீத முடிவு


அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை காதல் விவகாரத்தில் விபரீத முடிவு
x
தினத்தந்தி 9 Aug 2017 5:00 AM IST (Updated: 9 Aug 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே காதல் விவகாரத்தில், அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மணிகண்டம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த முடப்பள்ளி என்ற ஊரை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன். இதில் 2-வது மகள் கவிபாரதி(வயது 20). இவர் திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள சேதுராப்பட்டி அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 3-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி, அவர் கல்லூரிக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற கவிபாரதி, மாலை விடுதிக்கு திரும்பியதில் இருந்து சோர்வுடன் காணப்பட்டுள்ளார். இரவில் அவருடன் அறையில் தங்கியிருந்த மற்ற மாணவிகள், உணவு சாப்பிட கேன்டீனுக்கு சென்றனர். இதனால் கவிபாரதி மட்டும் அறையில் இருந்தார். உணவு சாப்பிட்ட பின்னர் மற்ற மாணவிகள் அறைக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அறை உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

இதுகுறித்து அந்த மாணவிகள் விடுதி காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த விடுதி காப்பாளர், மாணவிகள் உதவியுடன் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது மின்விசிறியில் கயிற்றால் தூக்குப்போட்ட நிலையில் கவிபாரதி தொங்கியதை கண்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக விடுதி ஊழியர்கள் உதவியுடன் கயிற்றை அறுத்து கவிபாரதியை கீழே இறக்கினர். மயக்க நிலையில் இருந்த கவிபாரதியை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு கவிபாரதியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விடுதி நிர்வாகத்தினர் மணிகண்டம் போலீஸ் நிலையத்திற்கும், கவிபாரதியின் பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த கவிபாரதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சக மாணவ, மாணவிகள் அவருடைய உடலை கண்டு கதறி அழுதனர். பின்னர் மணிகண்டம் போலீசார் கவிபாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கவிபாரதியின் தந்தை ரமேஷ் கொடுத்த புகாரின்பேரில், மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கவிபாரதியும் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவரும் காதலித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் கவிபாரதி, அந்த மாணவருடன் செல்போனில் பேசியபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், இதனால் மனமுடைந்து கவிபாரதி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம், என்றும் தெரியவந்தது. மேலும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாணவ, மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story