விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் முதல்–மந்திரி சித்தராமையா பேட்டி
கர்நாடகத்தில் நிலவும் வறட்சி குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என்று முதல்–மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
சிக்கமகளூரு,
முதல்–மந்திரி சித்தராமையா நேற்று சிக்கமகளூரு மாவட்டம் கடூரில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட் மைதானத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். பின்னர் மறைந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் நினைவு நாளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
மத்திய அரசு பிற்படுத்தப்பட்டோரின் நலனுக்காக சாதி பாக்யா திட்டத்தை கொண்டுவர முன்வந்துள்ளது. ஆனால், நாங்கள் முன்பே சாதி பாக்யா திட்டத்தை கர்நாடகத்தில் அமல்படுத்தி உள்ளோம். கர்நாடகத்தில் சாதி பாக்யா திட்டத்தை அமல்படுத்தியபோது, எடியூரப்பா, ஷோபா உள்பட பா.ஜனதாவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசுக்கு எதிராக போராட்டங்களும் நடத்தினர். ஆனால், தற்போது மத்திய அரசே அந்த திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த முன்வந்துள்ளது.
இதற்கு கர்நாடக மாநில பா.ஜனதாவினர் வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்கள். கர்நாடக காங்கிரஸ் அரசு ஏதாவது திட்டங்களை கொண்டுவந்தால் அதனை எதிர்ப்பதும், அதே திட்டத்தை மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்தால் ஆதரவு தெரிவிப்பதுமே கர்நாடக பா.ஜனதாவினரின் வேலையாக உள்ளது.
காங்கிரஸ் அரசு கொண்டு வந்த திட்டங்களை எதிர்க்கும் பா.ஜனதா, பின்னர் அந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வாங்கிய கடன் ரூ.83 கோடியை தள்ளுபடி செய்த மத்திய அரசு, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது ஏன்?.
கர்நாடகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க விரைவில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.