தரக்குறைவான வெடிகுண்டு அகற்றும் கருவிகளை தனியார் நிறுவனம் சப்ளை செய்தது உண்மை
தரக்குறைவான வெடிகுண்டு அகற்றும் கருவிகளை மாநில அரசுக்கு தனியார் நிறுவனம் சப்ளை செய்தது உண்மை என்று சட்டசபையில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
மும்பை,
மாநில வெடிகுண்டு நிபுணர்களுக்கு தனியார் நிறுவனம் சப்ளை செய்த பாதுகாப்பு உபகரணங்கள், வெடிகுண்டு அகற்றும் கருவிகள் ஆகியவை தரம் குறைவானதாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நேற்று சட்டசபையில் பாரதீய ஜனதா உறுப்பினர் அதுல் பாத்கல்கர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், கூறி இருப்பதாவது:–
தனியார் நிறுவனம் சப்ளை செய்த வெடிகுண்டு அகற்றும் கருவிகள் தரம் குறைவாக இருந்தது உண்மை தான். அவற்றை தென் ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் இருந்து அந்நிறுவனம் வாங்கியிருக்கிறது. ஆகையால், இனி உயர் ரக வெடிகுண்டு அகற்றும் கருவிகளை அமெரிக்காவில் இருந்து வாங்க தீர்மானித்து இருக்கிறோம். ஒப்பந்தத்திலும் இதுபற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது.
தரக்குறைவான கருவிகளை சப்ளை செய்த நிறுவனம் மீது ஏற்கனவே கொலபா போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். அந்நிறுவனத்துக்கு வழங்கிய ரூ.6 கோடியே 21 லட்சத்து 69 ஆயிரத்து 120–யை 18 சதவீத வட்டியுடன் வசூலிக்க ஐகோர்ட்டில் அரசு வழக்கு தொடர்ந்து இருக்கிறது.
இவ்வாறு தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.