2 மந்திரிகள் பதவி விலக வலியுறுத்தல் மராட்டிய சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி


2 மந்திரிகள் பதவி விலக வலியுறுத்தல் மராட்டிய சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி
x
தினத்தந்தி 9 Aug 2017 5:30 AM IST (Updated: 9 Aug 2017 5:25 AM IST)
t-max-icont-min-icon

முறைகேடு புகாரில் மந்திரிகள் பிரகாஷ் மேத்தா, சுபாஷ் தேசாய் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி மராட்டிய சட்டசபையில் எதிர்க் கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதன் காரணமாக சட்டசபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மும்பை,

மராட்டியத்தில் 2 மந்திரிகள் முறைகேடு புகாரில் சிக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வீட்டுவசதி துறை மந்திரி பிரகாஷ் மேத்தா (பா.ஜனதா) தெற்கு மும்பை தார்டுதேவ் பகுதியில் குடிசை சீரமைப்பு திட்டத்தில் விதிமுறை மீறலில் ஈடுபட்டதாகவும், இதனால் ரூ.500 கோடி வரை ஊழல் புரிந்ததாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதன் மீது விசாரணை நடத்த முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

அதோடு, குடிசை சீரமைப்பு திட்ட பயனாளிகளின் பட்டியலில் மந்திரி பிரகாஷ் மேத்தாவின் மகன் பெயரும், உறவினர்களின் பெயரும் இடம்பெற்றிருந்ததாக எதிர்க்கட்சியினர் அடுத்த குற்றச்சாட்டை முன்வைத்தனர். அத்துடன், விசாரணை நிறைவடையும் வரையில், அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தினர்.

பரபரப்பான இந்த சூழலில், சிவசேனா மூத்த தலைவரும், தொழில்துறை மந்திரியுமான சுபாஷ் தேசாய் மீதும் நில முறைகேடு குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் முன்வைத்தனர். நாசிக்கில் தொழில் மேம்பாட்டு கழகத்தால் (எம்.ஐ.டி.சி) கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அதன் உரிமையாளர்களுக்கே மந்திரி சுபாஷ் தேசாய் விதிமுறைகளை புறக்கணித்து வழங்கியதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
எதிர்க்கட்சியினரின் இந்த அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளால் அரசியல் களம் சூடுபிடித்தது.

இந்த பிரச்சினையை நேற்று சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீலும், தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் அஜித்பவாரும் சேர்ந்து எழுப்பினர். ஏற்கனவே நில ஒப்பந்த ஊழலில் சிக்கி, வருவாய்த்துறை மந்திரி பதவியை இழந்த பா.ஜனதா மூத்த தலைவர் ஏக்நாத் கட்சேயை போல், மந்திரிகள் பிரகாஷ் மேத்தா மீதும், சுபாஷ் தேசாய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்து, அரசுக்கு எதிராக கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளி காரணமாக சட்டசபையை நடத்துவதில் சபாநாயகருக்கு சிரமம் ஏற்பட்டது. எனவே சபையை தொடர்ச்சியாக 3 முறை ஒத்திவைத்தார். சட்டசபை மீண்டும் கூடியபோதும், அமைதி திரும்பவில்லை. இதனால், சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார்.

இந்த பிரச்சினை நேற்று மேல்-சபையிலும் அனலை கிளப்பியது. மேல்-சபை கூடியதும், முதலில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு பிரச்சினையை எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே (தேசியவாத காங்கிரஸ்) கையில் எடுத்தார். மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு பற்றி விவாதிப்பதை நிறுத்திவிட்டு, அதற்கான முடிவை மாநில அரசு அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசு உடனடியாக முடிவை அறிவிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக வரிந்துகட்டி கொண்டு கோஷம் எழுப்பினர். இதனால், மேல்-சபையை 20 நிமிடத்துக்கு அதன் தலைவர் ராம்ரஜே நிம்பல்கர் ஒத்திவைத்தார்.

சபை மீண்டும் கூடியதும், எம்.ஐ.டி.சி. நில ஊழலில் தொடர்புடைய தொழில்துறை மந்திரி சுபாஷ் தேசாய் மீது சிறப்பு விசாரணை குழு விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணை நிறைவடையும் வரை அவர் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே கூறினார்.

அப்போது, மந்திரி சுபாஷ் தேசாய் எழுந்து விளக்கம் அளிக்க முயன்றார். இருப்பினும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டதால், அவரது பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுமாறு மேல்-சபை தலைவர் ராம்ரஜே நிம்பல்கர் உத்தரவிட்டார். அத்துடன், எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக மேல்-சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்தார்.

மந்திரிகள் பிரகாஷ் மேத்தா மற்றும் சுபாஷ் தேசாய் ஆகியோர் பதவி விலக வலியுறுத்தி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியதால், நேற்று ஒரே நாளில் இரு அவைகளும் முடங்கியது குறிப்பிடத்தக்கது.


Next Story