ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் மாநகராட்சி கமிஷனர் கைது


ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் மாநகராட்சி கமிஷனர் கைது
x
தினத்தந்தி 9 Aug 2017 2:51 PM IST (Updated: 9 Aug 2017 2:51 PM IST)
t-max-icont-min-icon

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் மாநகராட்சி கமிஷனர் கைது செய்யப்பட்டு உள்ளார்.


வேலூர்,

வேலூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. வேலூர் வேலப்பாடி பகுதியில்  டெங்கு கொசு மருந்து அடிக்கும் பணியும், வீடுகளில்  உள்ள தொட்டிகளில் மருந்து தெளிக்கும் பணியை வேலப்பாடியை சேர்ந்த பாலாஜி (வயது30). எடுத்திருந்தார்.  இந்த பணிகளை ஜூன் மாதம் சரியாக அவர் முடித்து விட்டார். இதற்கான டெண்டர் தொகை ரூ.10 லட்சத்து 23 ஆயிரம்.  

இந்த தொகைக்கு காசோலையை வேலூர் மாநகராட்சி கமிஷனர் குமாரிடம் சென்று அவர் கேட்டார். அப்போது கமிஷனர் குமார் எனக்கு 2 சதவீதம் கமிஷன் தொகையாக ரூ-.22 ஆயிரம் லஞ்சம் கொடுக்குமாறு கேட்டார். அதற்கு பாலாஜி ரூ.20 ஆயிரம் தருவதாக ஒப்புக் கொண்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலாஜி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எஸ்.பி. பாலசுப்பிரமணி தலைமையிலான போலீசார் பாலாஜியிடம் ரூ.20 ஆயிரம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுத்து கமிஷனர் குமாரிடம் கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர்.

அவரும் இன்று காலை கமிஷனரை சந்தித்து ரசாயம் தடவிய பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு  மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மாநகராட்சி கமிஷனர் குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் திடீர் வருகையால் கமிஷனர் திகைத்தார். அவரிடம் போலீசார் மாநகராட்சி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாநகராட்சி கமிஷனரே லஞ்ச வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கமிஷனர் குமார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story