தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
தென்காசி,
தென்காசி, குற்றாலம் பகுதிகளில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.
மதிப்பீட்டு குழுதமிழக சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், இலஞ்சி பகுதிகளில் நேற்று ஆய்வு செய்தனர். இந்த குழுவின் தலைவர் நரசிம்மன் எம்.எல்.ஏ. தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் சுதர்சன் (மாதவரம்), பாஸ்கர் (நாமக்கல்), மனோன்மணி (வீரபாண்டி), ஜெயந்தி பத்மநாதன் (குடியாத்தம்), செல்வமோகன்தாஸ் பாண்டியன் (தென்காசி), பரமசிவம் (வேடசந்தூர்), தங்கம் தென்னரசு (திருச்சுழி), ராஜா (தாம்பரம்), நந்தகுமார் (அணைக்கட்டு) மற்றும் குழுவின் துணை செயலாளர்கள் சிவக்குமரன், பாலகிருஷ்ணன், நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் இந்த ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.
நலத்திட்ட உதவிகள்இந்த குழுவினர் தென்காசி அருகே உள்ள இலஞ்சியில் ரூ.4½ லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தனர். செங்கோட்டையில் ரூ.66 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, அச்சன்புதூரில் ரூ.1 கோடியே 14 லட்சம் செலவில் கட்டப்பட்டு வரும் மாணவர்கள் விடுதியை ஆய்வு செய்தனர்.
பின்னர் ஆய்க்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.1 கோடியே 20 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள், தென்காசி அம்மா உணவகம், மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி, மேலகரத்தில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள நூலக கூடுதல் கட்டிடம் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். பின்னர் மாலையில் குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் இந்த குழுவின் கூட்டம் நடைபெற்றது. இதில் 138 பேருக்கு ரூ.1 கோடி 33 லட்சத்து 13 ஆயிரத்து 823 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.