சிவகங்கையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்


சிவகங்கையில் சிறப்பு கைத்தறி கண்காட்சி கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:15 AM IST (Updated: 10 Aug 2017 12:49 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் சிறப்பு கைத்தறி கண்காட்சியை மாவட்ட கலெக்டர் மலர்விழி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி நாளை வரை நடைபெறுகிறது.

சிவகங்கை,

தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணி நூல் சார்பில் தேசிய கைத்தறி தினத்தையொட்டி சிறப்பு கைத்தறி கண்காட்சி சிவகங்கை பெமினா மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறும். கண்காட்சி தொடக்க விழா மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் நேற்று நடைபெற்றது. சிறப்பு விற்பனை கண்காட்சியை தொடங்கி வைத்து கலெக்டர் மலர்விழி கூறியதாவது:–

ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய பரமக்குடி சரக கைத்தறி மற்றும் துணிநூல் உதவி இயக்குனர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் 88 நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இதன்மூலம் 12 ஆயிரத்து 535 நெசவாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த சங்கங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் சேலை ரகங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். கைத்தறியால் உற்பத்தி செய்யப்படும் துணி ரகங்களின் பாரம்பரியம், தொன்மை, தனித்தன்மை மற்றும் சிறப்பு ஆகியவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7–ந்தேதி தேசிய கைத்தறி தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி, விற்பனை கைத்தறி மற்றும் துணிநூல் துறை மூலம் நடத்தப்படுகிறது.

இந்த கைத்தறி கண்காட்சியில் பரமக்குடி சரக நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் காட்டன் சேலைகள், செயற்கை பட்டு சேலைகள், ஆர்கானிக் காட்டன் சேலைகள், காட்டன் பட்டு சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைத்தறி துணிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பரமக்குடியிலிருந்து காட்டன் சேலைகள் மற்றும் பட்டு சேலை ரகங்களும், நாகர்கோவில் வேட்டி, கடலூர் குறிஞ்சிப்பாடி கைலி ரகங்களும் கண்காட்சியில் உள்ளன.

இந்த கண்காட்சியில் விற்பனை இலக்காக ரூ.20 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து ரகங்களுக்கும் அரசு தள்ளுபடி 20 சதவீதம் அல்லது ரூ.100 தள்ளுபடி வழங்கப்படவுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கைத்தறி துணிகளை வாங்கி, கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் சம்பத், சிவகங்கை வட்டாட்சியர் நாகநாதன், கைத்தறி மற்றும் துணிநூல் அலுவலர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story