புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:15 AM IST (Updated: 10 Aug 2017 1:04 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

தாராபுரம்,

தாராபுரம் நகராட்சியில் 15–வது வார்டுக்கு உட்பட்ட என்.என்.பேட்டை வீதியில் ஏற்கனவே ஒரு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதி என்பதால், இந்த இடத்தில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு அப்போது பொது மக்களும், வியாபாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பொதுமக்களின் எதிர்ப்பை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இதனால் போராட்டங்கள் நடைபெற்றது. டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு திட்டமிட்டபடி என்.என்.பேட்டை வீதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. தற்போது அதிகாலை முதல் இரவு 12 மணி வரை மதுவிற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதையடுத்து மதுப்பிரியர்களின் நலனுக்காக என்.என்.பேட்டை வீதி ஒரு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் அதே பகுதியில் சுமார் 100 அடி தூரத்தில் உள்ள அரிசிக்கடை சந்தில் மீண்டும் ஒரு டாஸ்மாக் கடை திறப்பதற்கு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுபோல் தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டிணத்திலிருந்து ஊத்துப்பாளையம் செல்லும் வழியில், தனியாருக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு டாஸ்மாக் கடை அமைக்க இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து, அந்த பகுதி பொதுமக்களும், டாஸ்மாக் கடையை தங்கள் பகுதியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாராபுரத்தில் உள்ள சப்–கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதைதொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் சப்–கலெக்டர் கிரேஸ்பச்சாவு மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில் ஆட்சேபனை செய்யும் இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்ற கோர்ட்டு உத்தரவு சுட்டிக்காட்டப்பட்டதோடு, ஊத்துப்பாளையம் சாலை மற்றும் அரிசிக்கடை சந்தில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அதற்கு உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, தக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story