மகளிர் சுய உதவிக்குழுவை ஊக்குவிக்க கல்லூரி சந்தை, கலெக்டர் தகவல்


மகளிர் சுய உதவிக்குழுவை ஊக்குவிக்க கல்லூரி சந்தை, கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:30 AM IST (Updated: 10 Aug 2017 1:13 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்திட கல்லூரிகளில் சந்தை அமைக்கப் படுகிறது.

விருதுநகர்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சிவகாசி காளஸ்வரி கல்லூரியில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனையினை கலெக்டர் சிவஞானம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். கண்காட்சியினையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை 3 தினங்கள் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் விருதுநகர் மாவட்டம் உள்பட மதுரை, திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 18 மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களான ஆயத்த ஆடைகள், மண்பொருட்கள், சணல்நார் பொருட்கள், கிறிஸ்டல் பொருட்கள், மெழுகுவர்த்தி, பிளாஸ்டர் ஆப் பாரிஸ் பொம்மைகள், மூலிகை பொருட்கள், கைவினைப் பொருட்கள், பேன்ஸி மற்றும் உணவுப்பொருட்கள்் போன்றவை இடம் பெற்றுள்ளன.

மகளிர் சுய உதவிக்குழு உற்பத்தி பொருட்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி ஊக்குவிக்கவும், அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தில் இளைய தலைமுறையின் பங்களிப்பை அதிகப்படுத்தவும் கல்லூரி சந்தை என்ற பெயரில் கல்லூரிகளில் கண்காட்சி நடத்தப்படுகிறது.

அனைத்து மாணவர்களும் கைவினைப் பொருட்களைப் பற்றி தெரிந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்ற நோக்கில்் வருகிற செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங் கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், அதனைத் தொடர்ந்து விருதுநகர் தேசபந்து மைதானத்திலும் மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனைக்காக கல்லூரி சந்தை அமைக்கப்படுகிறது.

அக்டோபர் மாதத்தில் சிவகாசி எஸ்.எப்.ஆர். கல்லூரி யிலும், ஜனவரியில் வி.பி.எம்.எம். பெண்கள் கல்லூரியிலும் சுய உதவிக் குழுக்களின் கல்லூரி சந்தை நடைபெறுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.விழாவில் மகளிர் திட்ட இயக்குனர்சரவணன், உதவி திட்ட அலுவலர் பால்ராஜ், முருகன், அழகப்பன், பொன்னுகுமார் மற்றும் சிவகாசி காளஸ்வரி கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் ராஜேஷ், கல்லூரி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story