விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்


விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்
x
தினத்தந்தி 10 Aug 2017 5:45 AM IST (Updated: 10 Aug 2017 1:31 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் ரூ.1,000 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விழுப்புரத்தில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் மக்கள் நலத்திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். கல்வராயன்மலை, திருநாவலூர் மற்றும் உளுந்தூர்பேட்டையில் ரூ.15.57 கோடியில் மாதிரிப்பள்ளிகள், ஆசிரியர் பட்டப்படிப்புக்காக ரூ.4 கோடியே 83 லட்சம் செலவில் தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, ரூ.7 கோடியே 97 லட்சம் செலவில் மகளிருக்கான புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் ரூ.863 கோடியே 40 லட்சம் செலவில் ஊரக பகுதிகளில் 31 ஆயிரத்து 146 வீடுகள், வறட்சியால் பாதிக்கப்பட்ட 2124 இடங்களில் ரூ.56 கோடியே 77 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பில் குடிநீர் பணிகள், மயிலம் மற்றும் பேரணியில் புதிய ரெயில்வே மேம்பாலம், சின்னசேலத்தில் வேளாண்மை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றுள்ளது.

ஆனால் ஒரு சிலர் சுயநலத்துக்காக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள். அதை முறியடித்து நாம் கட்டுக்கோப்புடன் மக்கள் பணியாற்ற வேண்டும். சிறு, குறு தொழில் செய்யும் வியாபாரிகள் மீது பற்றுக்கொண்டது இந்த அரசு. அதேபோல் விவசாயிகள் நலன்காக்கும் அரசு.

கருவில் இருக்கும் குழந்தை கூட நன்றாக வளர சிந்தித்து, சிந்தித்து சேவை செய்தவர் ஜெயலலிதா. அதனால் தான் அவரை தெய்வத்துக்கு சமமாக எண்ணுகிறோம். தாயுள்ளம் கொண்ட அவர் எத்தனையோ ஏழைகளை வாழ வைத்தவர். அந்த தெய்வத்தின் ஆட்சி தான் இப்போது நடந்து வருகிறது. இந்த ஆட்சி இருக்குமா? இருக்காதா?, எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று யாராரோ பேசி வருகிறார்கள். இந்த ஆட்சியை யாராலும் அசைக்கவோ, ஆட்டவோ முடியாது. இது மக்களுக்கான ஆட்சி, மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி.

இந்த இயக்கத்தில் உள்ளவர்கள் இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்கள். அவர்கள் இருக்கும்வரை இந்த ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது. இந்த ஆட்சி தொடர்ந்து செயல்படும்.

நான் இங்கே வந்தபோதே அமைச்சர் சி.வி.சண்முகம், ஏற்கனவே அம்மா இங்கே வந்தபோது அறிவித்துச்சென்ற திட்டங்களில் சில பிரச்சினைகள் உள்ளது. அதை நீங்கள் நிறைவேற்றித்தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதேபோல் இந்த பகுதியின் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னோடி நிர்வாகிகள் அத்தனைபேரும் ஒருமித்த கருத்தோடு தெரிவித்திருக்கிறீர்கள். அதனை நிறைவேற்றும் விதமாக இங்கே புதிய அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் வழியோர ஊரக குடியிருப்புகளுக்கான நாள் ஒன்றுக்கு 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை நன்னீராக்கும் கூட்டு கூடிநீர் திட்டம் ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டு ஏற்கனவே கொள்ளிடம் ஆற்றை நீர்ஆதாரமாக கொண்டு அறிவிக்கப்பட்ட திட்டத்தில் தற்போது 140 ஆண்டுகள் இல்லாத கடும் வறட்சியால் நீராதாரம் குறைந்து விட்டது.

எனவே விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் நிரந்தர தீர்வு காணும்பொருட்டு மாற்று ஏற்பாடாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதன் மூலம் மரக்காணத்தில் இருந்து விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி நகராட்சிகள், உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, சங்கராபுரம் பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, காணை, விக்கிரவாண்டி, திருநாவலூர், மரக்காணம், வானூர், திருவெண்ணெய்நல்லூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் என்ற மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அதேபோல் மற்றொரு அறிவிப்பு. அம்மாவின் நல்லாசியுடன் விழுப்புரம் நகராட்சி விரிவாக்கப்பட்ட பகுதிகளான பாதாள சாக்கடை திட்டம் ரூ.198 கோடி மதிப்பீட்டில் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும். விழுப்புரம் நகராட்சியில் ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டம் நகரின் மையப்பகுதியில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விழுப்புரம் நகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதிகளான பானம்பட்டு, சாலமேடு, வழுதரெட்டி, இருமனந்தாங்கல். காகுப்பம் ஆகிய பகுதிகளில் ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுடன் ரூ.198 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.

மேலும் விழுப்புரத்திற்கு அறிவிக்கப்பட்ட அரசு மகளிர் கல்லூரி இனிமேல் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கல்லூரி பெயரிலும், கலெக்டர் அலுவலக பெருந்திட்டவளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கம் டாக்டர் எம்.ஜி.ஆர். உள்விளையாட்டு அரங்கம் என அழைக்கப்படும். விழுப்புரத்தில் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசானை நேற்று வெளியிடப்பட்டது. அந்த பணிகள் விரைவில் தொடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story