ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2017 4:30 AM IST (Updated: 10 Aug 2017 2:04 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

கோவை மாவட்ட பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன் நேற்று நடந்தது. இதில் பிளாஸ்டிக் மறுசுழற்சி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் முகமது ரபி, செயற்குழு உறுப்பினர் சலீம், பிளாஸ்டிக் வியாபாரிகள் சங்க தலைவர் இஸ்மாயில் உள்பட பலர் கோரிக்கைகள் அடங்கிய அட்டைகளுடன் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பேசியதாவது:–

முதல் தர பிளாஸ்டிக்கிற்கு முன்பு 30 சதவீத வரி இருந்தது. தற்போது ஜி.எஸ்.டி. வரி அமலுக்கு வந்த பிறகு அது 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. ஆனால் குப்பையில் இருந்து சேகரமாகும் பழைய பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்கிற்கு முன்பு 5 சதவீத வரி இருந்தது. அது ஜி.எஸ்.டி.யில் 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தேவையில்லை என்று வீசும் பிளாஸ்டிக்கை அப்படியே விட்டால் அது மண்ணில் மக்காது. அதோடு சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும். எனவே நாங்கள் தேவையில்லை என்று வீசப்பட்ட பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்து பிளாஸ்டிக் பொருட்கள் தயார் செய்தால் அதற்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்படுகிறது.

நாங்கள் பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்துக்கு மறைமுகமாக உதவி வருகிறோம். ஆனால் நாங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்கிற்கு அதிக வரி விதிக்கப்படுவதால் பழைய பிளாஸ்டிக்கை யாரும் சேகரிக்க மாட்டார்கள். இதனால் குப்பை பொறுக்குபவர்கள், நடைபாதை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.

மேலும் முதல் தர பிளாஸ்டிக்கிற்கும், மறுசுழற்சி பிளாஸ்டிக்கிற்கும் ஒரே விகிதத்தில் வரி விதித்தால் மறுசுழற்சி பிளாஸ்டிக் விற்பனை ஆகாது. எனவே மறுசுழற்சி பிளாஸ்டிக்கிற்கு ஜி.எஸ்.டி. வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் பேசினர்.


Next Story