நெய்வேலி 2–வது சுரங்கத்தில் சேதமடைந்த மண்வெட்டும் எந்திரம் சீரமைப்பு
நெய்வேலி 2–வது சுரங்கத்தில் நிலக்கரி வெட்டியபோது சேதமடைந்த மண்வெட்டும் எந்திரம் சீரமைக்கப்பட்டு, 6 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
நெய்வேலி,
நெய்வேலி 2–வது சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கும் பகுதியில் பணியில் ஈடுபட்டு வந்த மண்வெட்டும் எந்திரம் கடந்த 08.2.2017 அன்று 2–ம் கட்ட பணி நேரத்தின் போது, அடியில் அதிக அழுத்தத்தில் இருந்த நிலத்தடி நீர் ஊற்றின் மேற்பகுதி உடைந்ததால், நீர்பெருக்கெடுத்ததன் மூலம், எந்திரத்தின் ஒருபகுதி மண்ணில் புதைந்ததுடன், சமநிலையை இழந்து மிகவும் அபாயகரமான நிலையில் நின்றது. இந்த எந்திரத்தினை மீட்டு எடுப்பது மிகவும் ஆபத்தான ஒரு செயல் என அனைவராலும் உணரப்பட்டது.
இந்த எந்திரத்தினை உருவாக்கிய எல் அண்ட் டி நிறுவனத்திற்கு தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கிய ஆஸ்திரேலிய நாட்டின் சான்ட்விக் நிறுவனத்தின் நிபுணர்கள் நேரடியாக இந்த எந்திரத்தை பார்வையிட்ட பின், பாகங்களை ஒவ்வொன்றாக கழற்றி எடுத்து வேறு பகுதிக்கு கொண்டு சென்று மீண்டும் ஒருங்கிணைப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றனர்.
இருந்த போதிலும் என்.எல்.சி. இந்தியா நிறுவன பொறியாளர்கள், அந்த எந்திரத்தினை அது புதையுண்ட இடத்திலேயே மீட்டெடுக்க வழிமுறைகளை ஆய்வு செய்து, அதை செயல்படுத்தினர். என்.எல்.சி. இந்தியா சுரங்க இயக்குனர் சுபீர்தாஸ் வழிகாட்டுதலின்படி இப்பணிக்கென 3 குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்றன. இத்துறையில் மிகுந்த அனுபவம் கொண்ட பொறியாளர்கள், பாதுகாப்புதுறை நிபுணர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் 62 நாட்களுக்கு பிறகு கடந்த 10.4.2017 அன்று மீட்கப்பட்டது.
பின்னர் அந்த எந்திரம் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டு, அங்கு அனைத்து பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தேவையான புதிய உதிரிபாகங்கள் பொருத்தப்பட்டது. பின்னர் தற்போது இரண்டாம் சுரங்கத்தில் பழுப்பு நிலக்கரி வெட்ட கடந்த 6–ந் தேதி பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சுரங்கத்துறை இயக்குனர் சுபீர்தாஸ் கலந்து கொண்டு, புதுப்பிக்கப்பட்ட எந்திரத்தை இயக்கி வைத்தார். இந்நிகழ்வில் செயல் இயக்குனர்கள் சையத் அப்துல் பதேக் காலித், ரங்கநாதன், தலைமை பொதுமேலாளர் ராஜசேகரன், சிறப்பு சுரங்க எந்திரங்கள் பிரிவு பொதுமேலாளர் வேலுசாமி, உயர் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.