என்ஜினீயர்களான அண்ணன்–தம்பி விஷம் குடித்து தற்கொலை
ஹலகூரைச் சேர்ந்த என்ஜினீயர்களான அண்ணனும், தம்பியும் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஹலகூர்,
பெங்களூரு புறநகரில், ஹலகூரைச் சேர்ந்த என்ஜினீயர்களான அண்ணனும், தம்பியும் வேலை கிடைக்காத விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதமும் போலீசாரிடம் சிக்கியது.
பெங்களூரு புறநகர் கனகபுரா தாலுகா சாதனூர் கிராமத்தையொட்டிய வனப்பகுதியில் 2 வாலிபர்கள் இறந்து கிடந்தனர். அவர்களுடைய உடல்கள் மிகவும் அழுகி இருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் இதுபற்றி சாதனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்த வாலிபர்களின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர்.விசாரணையில் அவர்கள் அவர்கள் மண்டியா மாவட்டம் ஹலகூர் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார்(வயது 24), அவருடைய தம்பி வினய்குமார்(22) என்பதும், அவர்கள் 2 பேரும் என்ஜினீயர்கள் என்பதும், அவர்கள் தற்கொலை செய்து கொண்டு 15 நாட்களுக்கும் மேல் ஆகியிருக்கும் என்பதும் தெரியவந்தது.
மேலும் அவர்கள் 2 பேரும் வேலை தேடி பெங்களூருவுக்கு வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர்கள் சாதனூர் கிராமத்தையொட்டிய வனப்பகுதிக்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதுமட்டுமல்லாமல் சஞ்சய்குமாரின் சட்டைப்பையில் இருந்து ஒரு உருக்கமான கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், ‘‘எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும், படித்த படிப்புக்கான வேலை கிடைக்காத விரக்தியில் பெற்றோருக்கு பாரமாக இருக்க விரும்பாமல் தாங்கள் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாகவும்’’ உருக்கமாக எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார், மருத்துவக்குழுவினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அங்கேயே இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும், அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த சம்பவம் ஹலகூர் மற்றும் சாதனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.