மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை அமைச்சர் ஷாஜகான் எச்சரிக்கை
மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஷாஜகான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருக்கனூர்,
புதுவை மாநிலம் வில்லியனூர் வருவாய்துறைக்கு உட்பட்ட ஒதியம்பட்டு, செல்லிபட்டு பகுதியில் சங்கராபரணி ஆற்றில் தொடர்ந்து மணல் திருட்டு நடப்பதாக அமைச்சர் ஷாஜகானுக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து நேற்று அமைச்சர் ஷாஜகான், கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், வில்லியனூர் துணை கலெக்டர் உதயகுமார், தாசில்தார் மேத்யூ, திருக்கனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் அதிகாரிகள், கிராமப்புற மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் உளவாய்க்கால் சந்திரசேகர் ஆகியோர் அந்த பகுதியில் நேரடியாக ஆய்வு செய்தனர்.
அப்போது ஒதியம்பட்டு பகுதியில் சுரங்க பாதை அமைத்து மணல் திருட்டு நடந்து இருப்பது தெரியவந்தது. இதே போல் செல்லிப்பட்டு பகுதியில் மேம்பாலத்தின் அடியில் தொடர்ந்து மணல் திருடப்பட்டதால் பலமே இடிந்து விழும் நிலையில் இருப்பதையும் நேரில் கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பிள்ளையார் குப்பம் பகுதியில் மணல் குவாரி போல் செயல்படும் இடத்தையும் நேரில் பார்த்த அவர்கள் அந்த இடங்களில் மேலும் மணல் திருட்டு நடக்காமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் ஷாஜகான் நிருபர்களிடம் கூறியதாவது;–
புதுவை மாநிலத்தில் சட்டத்துக்கு புறம்பாக மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து இந்த பகுதிகளில் ஆய்வு செய்தோம்.மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு உடந்தையாக யாரேனும் அதிகாரிகள் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வருவாய்துறையினரும், போலீசாரும் இணைந்து மணல் திருட்டை தடுக்க உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.மாட்டுவண்டிகள், லாரிகளில் வந்து மணல் திருடுபவர்கள், மணலை திருடி பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து தகவல் கொடுப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும். மணல் திருட்டு சம்பவத்தின் போது பிடிபடுபவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் ஷாஜகான் கூறினார்.