சில்லரை உர விற்பனையாளர்களுக்கு ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவி
சில்லரை உர விற்பனையாளர்களுக்கு ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் சில்லரை உர விற்பனையாளர்களுக்கு ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவியை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே வழங்கி தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியார் சில்லரை உர விற்பனையாளர்களுக்கு ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவி (விற்பனை முனைய கருவி) வழங்கும் விழா நேற்று திருவண்ணாமலை வேங்கிகாலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குனர் ஏழுமலை முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தனியார் உர விற்பனையாளர்களுக்கு ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவி வழங்குவதை தொடங்கி வைத்தார். விழாவில் வேளாண்மை இணை இயக்குனர் செண்பகராஜ் தலைமை தாங்கி பேசியதாவது:–உர விற்பனையில் முறைகேடுகளை தடுக்க ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவி முலம் உரம் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. உரம் பெறுவதற்கு விவசாயிகள் ஆதார் அட்டையை கண்டிப்பாக எடுத்து வர வேண்டும். ஆதார் எண் உள்ள விவசாயிகள் நேரடியாக வந்து கைரேகையை பதிவு செய்ய வேண்டும். இந்த கருவியை உபயோகிப்பதன் மூலம் மானிய உரமானது விவசாயிகளை நேரடியாக சென்றடைகிறது. இனி வரும் காலங்களில் விவசாயிகளுக்கு விற்பனை செய்த பின்னரே உரங்களுக்கு உரிய மானிய தொகை உர நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
இந்த கருவி ரூ.25 ஆயிரம் மதிப்புள்ளது. 273 கருவிகளை ஸ்பிக் உர நிறுவனம் இலவசமாக வழங்கியுள்ளது. இந்த கருவி மூலம் உரங்கள் விற்பனை செய்வதால் மானிய உரமானது விவசாய மற்ற இதர பணிகளுக்கு உபயோகிப்பது தடுக்கப்படும். மேலும் கருவி மூலம் கொள்முதல், இருப்பு மற்றும் விவரங்கள் உடனுக்குடன் பெறலாம். மாவட்டத்தில், மீதமுள்ள தனியார் உர விற்பனையாளர்களுக்கு 2–ம் கட்டமாக விரைவில் ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவிகள் வழங்கப்பட உள்ளன.கூட்டுறவுத் துறை மூலம் செயல்பட்டு வரும் 162 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு உரிய ‘பாயிண்ட் ஆப் சேல்’ கருவிகள் இப்கோ உர நிறுவனம் மூலம் விரைவில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் மத்திய அரசின் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண்ராய், ஸ்பிக் உர நிறுவன விற்பனை மேலாளர் சுகுணராஜ், வேளாண்மை அலுவலர்கள் பெரியசாமி, மலர்விழி மற்றும் ராம்பிரபு, திருவண்ணாமலை வேளாண்மை இடுப்பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் வினோத், பொருளாளர் ஜி.ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.