அணைகளில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி ஏரலில் கடையடைப்பு– ஆர்ப்பாட்டம்
அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, ஏரலில் பொதுமக்களும், வியாபாரிகளும் கடையடைப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏரல்,
அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, ஏரலில் பொதுமக்களும், வியாபாரிகளும் கடையடைப்பு செய்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடையடைப்புகடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால், வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறு வறண்டு வருகிறது. தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் தடுப்பணையின் அடிப்பகுதி வழியாகவே சிறிதளவு கசிவுநீர் வெளியேறுகிறது. இதனால் அதன் கீழ்புறம் உள்ள ஏரல், முக்காணி சுற்று வட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
எனவே, அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, ஏரல் சுற்று வட்டார கிராம பொதுநல கமிட்டி சார்பில், ஏரலில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதனால் ஏரல் மெயின் பஜார், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
ஆர்ப்பாட்டம்தொடர்ந்து ஏரல் காந்தி சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. நட்டாத்தி முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பண்டாரம் தலைமை தாங்கினார். திருப்பணிசெட்டிகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம், ஏரல் முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் எட்வர்டு, ஏரல் முஸ்லிம் வியாபாரிகள் சங்க தலைவர் பாக்கர் அலி, உமரிக்காடு ஆனந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஏரல் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் தசரத பாண்டியன், முன்னாள் விவசாய சங்க அமைப்பாளர் காளிதாஸ், முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன், சூழவாய்க்கால் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சாதிக்குல் அமீன், ஜெயபாலன் உள்பட நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
சாலைமறியல்ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மதியம் சிறிதுநேரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனே ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் மற்றும் போலீசார், சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் சாலைமறியலை கைவிட்டனர்.
வருகிற 13–ந்தேதிக்குள் அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். இல்லையெனில் 14–ந்தேதி காலையில் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக ஏரல் சுற்று வட்டார கிராம பொதுநல கமிட்டியினர் தெரிவித்தனர்.