நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பரபரப்பு கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கத்தியுடன் ராணுவ வீரர் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை,
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் கத்தியுடன் ராணுவ வீரர் ரகளையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவ வீரர் ரகளைநெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பனவடலிசத்திரத்தை சேர்ந்த வள்ளிகண்ணு மகன் முருகராஜ் (வயது 35). இவர் காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். தற்போது நீலகிரியில் பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களாக அவருக்கு மனநிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் டாக்டரின் ஆலோசனை படி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவருடைய மனைவி முருகேசுவரி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளுக்கு பாடம் சொல்லி கொடுக்கும் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு கணவன்– மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. உடனே முருகராஜ் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு ஓடி வந்து, “என்னை கொலை செய்ய போறாங்க“ என்று சத்தம் போட்டு கொண்டே ஓடினார். தொடர்ந்து அவர் பஸ் நிலையத்தில் நின்ற பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டார்.
தொழிலாளி மீது தாக்குதல்நேற்று காலையில் பஸ் நிலையத்தை சுத்தம் செய்து கொண்டு இருந்த துப்புரவு தொழிலாளி மாரிச்சாமியின் என்பவரின் கையில் இருந்து துடைப்ப கட்டையை பறித்து அவரை சரமாரியாக முருகராஜ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்த முருகராஜின் தாய் செல்லத்தாய் பஸ் நிலையத்துக்கு வந்து தனது மகனை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் தாயாரால் மகனை கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணியாற்றும் அவரது மனைவிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சிறையில் இருந்து 10 காவலர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் வேன் வரவழைக்கப்பட்டது. அவர்கள், பஸ் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட முருகராஜை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். அவர், காவலர்களை கடித்து விட்டு அங்கு இருந்து தப்பி ஓடினார்.
கத்தியுடன்...பின்னர் முருகராஜ் ஓடி வந்து அங்குள்ள ஒரு ஓட்டலில் இருந்த கத்தியை எடுத்து கொண்டு “இனி என்னை பிடித்தால் கத்தியால் குத்தி விடுவேன்“ என்று மிரட்டினார். அவர் கத்தியுடன் சுற்றி வந்ததால், பயணிகள் அலறி அடித்து ஓடினார்கள். சிறை காவலர்கள் மற்றும் அங்கு இருந்த போலீசார் உதவியுடன் முருகராஜை நாலாபுறமும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.