ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது


ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 10 பவுன் நகை திருட்டு தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2017 4:15 AM IST (Updated: 11 Aug 2017 12:18 AM IST)
t-max-icont-min-icon

வடமதுரை அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 10 பவுன் நகை திருடிய தந்தை-மகன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

வடமதுரை,

திண்டுக்கல் அருகே உள்ள பித்தளைப்பட்டி பண்டியன் நகரை சேர்ந்தவர் ஜெயபாலாஜி. அவருடைய மனைவி அகிலாண்டேஸ்வரி (வயது 32). கடந்த சில தினங்களுக்கு முன்பு, திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு தனது கைக்குழந்தையுடன் சென்றார்.

பின்னர் அவர், பித்தளைப்பட்டி வருவதற்காக திண்டுக்கல் நோக்கி வந்த ஒரு அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது, தனது பையில் 10 பவுன் தங்க சங்கிலி, நெக்லஸ் ஆகியவற்றை வைத்திருந்தார். வடமதுரையை அடுத்த அய்யலூர் அருகே பஸ் வந்தபோது, தான் வைத்திருந்த பையை அகிலாண்டேஸ்வரி திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார்.

ஏனெனில், பையில் இருந்த நகைகளை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் அகிலாண்டேஸ்வரி புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்தார்.

ஓடும் பஸ்சில் கைவரிசை காட்டியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். இதற்கிடையே தான் உட்கார்ந்து இருந்த இருக்கையின் பின்னால் அமர்ந்திருந்த 4 பேர் மீது சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் அகிலாண்டேஸ்வரிதெரிவித்தார்.

இதனை நிரூபிக்கும் வகையில், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொன்னம்பலம்பட்டி சுங்கச்சாவடியில் அவர்கள் 4 பேரும் பஸ்சை விட்டு இறங்கியது தெரியவந்தது. பின்னர் அவர்கள், அங்கு ஏற்கனவே தயாராக நின்று கொண்டிருந்த ஒரு வேனில் ஏறி தப்பி சென்றனர். அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி போலீசார் விசாரணையில் இறங்கினர்.
இதற்கிடையே சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நகையை திருடி தப்பி சென்ற வேனின் பதிவு எண்ணை போலீசார் கண்டுபிடித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வேன் மற்றும் நகை திருடிய கும்பல் கரூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து வடமதுரை போலீசார், கரூர் சென்று வேனை பறிமுதல் செய்தனர்.
அகிலாண்டேஸ்வரியிடம் நகை திருடிய 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள், மதுரை அருகே உள்ள சிதம்பரம்பட்டி பகுதியை சேர்ந்த வீரபாண்டி (53), அவருடைய மகன் பிரவீன் பாண்டி(27), மருங்காபுரி அருகே உள்ள தேனூரை சேர்ந்த குமார் (37), பிரபு (32) என்று தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story