மாணவியிடம் சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது சாலை மறியலில்


மாணவியிடம் சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியர் கைது சாலை மறியலில்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:15 AM IST (Updated: 11 Aug 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே மாணவியிடம் சில்மிஷம் செய்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்தார்கள். மேலும் சாலைமறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள பூதப்பாடியில் புனித இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 7 மாணவிகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் பிரபு என்பவர் கடந்த 6-ந் தேதி திருப்பூரில் நடந்த கபடி போட்டிக்கு அழைத்து சென்றார். போட்டி முடிந்ததும் மாணவிகளை ஊருக்கு திரும்ப பஸ்சில் கூட்டிவந்தார். அப்போது 6 மாணவிகள் 2 இருக்கைகளில் அமர்ந்துகொள்ள, இடம் இல்லாமல் மாணவி ஒருவர் உடற்கல்வி ஆசிரியர் அமர்ந்த இருக்கையின் அருகில் உட்கார்ந்து வந்தார். அப்போது பிரபு அந்த மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி வீட்டுக்கு வந்ததும் மாணவி தன்னுடைய பெற்றோரிடம் கூறி உள்ளார். மேலும் மாணவிக்கு உடல்நிலையும் பாதிக்கப்பட்டு இருந்ததால் அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்கிடையே நேற்று முன்தினம் காலை சம்பந்தப்பட்ட மாணவியின் பெற்றோர் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களுடன் பள்ளிக்கு திரண்டு சென்று, உடற்கல்வி ஆசிரியர் பிரபுவிடம் இதுபற்றி கேட்கவேண்டும் என்றார்கள். அதற்கு பள்ளி நிர்வாகத்தினர் மறுத்ததால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள் அம்மாபேட்டை ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அம்மாபேட்டை போலீசார், தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோர் சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் பொதுமக்கள், ‘சம்பந்தப்பட்ட ஆசிரியரை எங்களிடம் ஒப்படைத்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம்‘ என்றார்கள். இதனால் அந்த வழியாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஈரோட்டில் இருந்து அதிவிரைவுப்படை போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை கலைத்தார்கள்.

இந்தநிலையில் மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக புகார் கூறப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் பிரபுவை அம்மாபேட்டை போலீசார் நேற்று காலை கைது செய்து, பவானி அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தார்கள். பின்னர் ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் பிரபு ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது பள்ளி நிர்வாகத்தினர் உடற்கல்வி ஆசிரியர் பிரபுவை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். பிரபுவுக்கு திருமணம் ஆகி மனைவி, குழந்தை உள்ளனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாக அம்மாபேட்டை கிராம நிர்வாக அதிகாரி சதீஷ் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 50-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story