பிள்ளைகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை


பிள்ளைகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 11 Aug 2017 5:30 AM IST (Updated: 11 Aug 2017 1:28 AM IST)
t-max-icont-min-icon

பெற்ற பிள்ளைகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று அவினாசியில் வயதான தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அவினாசி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி ஆடாசோலை பகுதியை சேர்ந்தவர் காளியப்பகவுண்டர் (வயது 90), விவசாயி. இவரது மனைவி வள்ளியம்மாள் (84). இவர்களுக்கு மணி, தங்கராஜ், தம்பி என்ற குமாரசாமி ஆகிய 3 மகன்களும் யசோதா, விஜயலட்சுமி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.

தற்போது காளியப்பகவுண்டரும், வள்ளியம்மாளும் தங்களது 3-வது மகன் குமாரசாமியுடன் திருப்பூர் மாவட்டம் அவினாசி சீனிவாசபுரத்தில் உள்ள அவர்களது வீட்டில் வசித்து வந்தனர். குமாரசாமி தனது குடும்பத்தினருடன் வீட்டில் மாடியில் வசித்து வருகிறார். அவரது பெற்றோர் வீட்டின் கீழ் பகுதியில் வசித்துவந்தனர். வள்ளியம்மாள் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். காளியப்ப கவுண்டருக்கு வயதாகி விட்டதால் சற்று சிரமப்பட்டு வந்தார். இருப்பினும் அவ்வப்போது மெதுவாக நடந்து வெளியே சென்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் குமாரசாமி வீட்டின் மாடியில் இருந்து இறங்கி வந்தார். அதுவரை பெற்றோர் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த குமாரசாமி அருகில் சென்று பார்த்தார். அப்போது பெற்றோர் அருகே விஷ பாட்டில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பெற்றோரை அவினாசியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் விரைந்து சென்று தம்பதிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் வயதான காலத்தில் தங்கள் பிள்ளைகளுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்றும், வயது முதிர்வு காரணமாக தான் இறந்துவிட்டால் தனது மனைவி கஷ்டப்படக்கூடாது என்பதாலும், உடல்நலக்குறைவு காரணமாக மனைவி இறந்து விட்டால் தனக்கு தாங்கிக்கொள்ள முடியாது என்றும் காளியப்பகவுண்டர் நினைத்ததுடன் வாழ்க்கையில் வெறுப்படைந்து தனது மனைவியுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் தான் நேற்று அதிகாலை எழுந்த தம்பதி இருவரும் வீட்டில் சாமி கும்பிட்டுள்ளனர். பின்னர் காளியப்ப கவுண்டர் மட்டும் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார். அதைத்தொடர்ந்து ஏற்கனவே தான் வாங்கி வைத்திருந்த விஷத்தை இருவரும் குடித்து தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

பெற்ற பிள்ளைகளுக்கு வயதான காலத்தில் தொந்தரவு கொடுக்கக்கூடாது என்று எண்ணிய தம்பதி ஒரே நேரத்தில் விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story