பரவனாற்றின் குறுக்கே மணல் மூட்டைகள் அடுக்கி வைப்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு


பரவனாற்றின் குறுக்கே மணல் மூட்டைகள் அடுக்கி வைப்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு
x
தினத்தந்தி 11 Aug 2017 4:15 AM IST (Updated: 11 Aug 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக பரவனாற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அடைக்கப்பட்டதால், பெருமாள் ஏரிக்கு தண்ணீர் செல்லவில்லை. இதை கண்டித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளனர்.

குறிஞ்சிப்பாடி,

கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் உள்ள வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுவது வழக்கம். தற்போது வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு கிடப்பதால், அங்கிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லப்படவில்லை. இந்த நிலையில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை குடிநீர் வாரியம் மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், நெய்வேலி என்.எல்.சி. சுரங்க பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரை குடிநீருக்காக கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சுரங்கம் 1 மற்றும் 1ஏ பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீர் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள வாலாஜா ஏரிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இந்த ஏரி தற்போது நிரம்பி இருக்கிறது. அதாவது 1,664 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியானது தனது முழு கொள்ளளவான 5½ அடியை எட்டிய நிலையில் இருக்கிறது.

ஏரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் பரவனாறு வழியாக பெருமாள் ஏரிக்கு செல்லும். இதன் மூலம் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படைந்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் பரவனாற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து நீர் வழித்தடம் அடைக்கப்பட்டது. அந்த பகுதியில் பெரிய அளவில் பள்ளம் தோண்டப்பட்டு, அதில் தேக்கி வைக்கப்படும் நீர் ராட்சத மோட்டார் மூலம் உறிஞ்சி வீராணம் குடிநீர் குழாயுடன் இணைக்கப்படுகிறது. அதன் மூலமாக வடக்குத்து வீராணம் நீரேற்று நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பரவனாற்றில் ஒரு பகுதியை மட்டும் பொதுப்பணித்துறையினர் அடைத்தனர். இந்த நிலையில் தற்போது முழுவதுமாக அடைத்து விட்டார்கள். இதனால் ஏரிக்கு தண்ணீர் செல்வது தடை பட்டுள்ளது. இதனால் ஏரியில் போதிய அளவில் தண்ணீர் இல்லாமல் வறண்டு வருகிறது. இதை சார்ந்து உள்ள விவசாயிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

இந்த பிரச்சினைக்கு, உரிய நடவடிக்கை எடுக்க கோரி உழவர் மன்ற தலைவர் தணிகாசலம், செயலாளர் வேலாயுதம் மற்றும் விவசாயிகள் நேரில் மனு அளித்தனர். இருப்பினும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. தொடர்ந்து இதே நிலை நீடித்தால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Next Story