விழுப்புரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு


விழுப்புரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு
x
தினத்தந்தி 11 Aug 2017 7:30 AM IST (Updated: 11 Aug 2017 2:32 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இனிப்பு வழங்கினார்.

விழுப்புரம்,

உயர்நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிய வேண்டும், இல்லையெனில் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும் இந்த நடைமுறையை ஆகஸ்டு 10-ந் தேதி முதல் கடைபிடிக்க வேண்டும் என்று விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று விழுப்புரம் மாவட்டம் முழுவதும் இருசக்கர வாகன ஓட்டிகள் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்வது நடைமுறைக்கு வந்தது. இதனை அந்தந்த பகுதியில் உள்ள போக்குவரத்து போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் நகரில் காந்தி சிலை, நான்குமுனை சந்திப்பு, பழைய பஸ் நிலையம், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் ஆகிய இடங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் கலந்துகொண்டு இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், ‘ஹெல்மெட்’ அணிந்து செல்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், விழுப்புரம் மாவட்டம் அதிக நெடுஞ்சாலைகளை கொண்ட மாவட்டம் என்பதால் விபத்துகளும் அதிகளவில் நடக்கிறது. இதற்கு வாகன ஓட்டிகளின் அலட்சியமும், கவனக்குறைவும்தான் காரணம். இருசக்கர வாகன ஓட்டிகள் பெரும்பாலும் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுவதற்கு ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்வதுதான் காரணம்.

ஒரு குடும்பத்தில் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தால் அதன் பிறகு அந்த குடும்பமே நிர்கதியாகி விடும். அதுபோன்ற இழப்பு எந்த குடும்பத்திலும் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இதுபோன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. எனவே நீங்கள் உங்களையும், உங்களது குடும்பத்தை பற்றியும் எண்ணிப்பார்த்து கவனமாக இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும்.

அதே நேரத்தில் கண்டிப்பாக அனைவரும் ‘ஹெல்மெட்’ அணிந்து செல்ல வேண்டும். இன்று (அதாவது நேற்று) ‘ஹெல்மெட்’ அணியாமல் வந்தவர்களுக்கு ஒரு அறிவுரையாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மட்டும் கொடுத்து அனுப்புகிறோம். நாளை (இன்று) முதல் கட்டாயம் ‘ஹெல்மெட்’ அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு அவர்களது வாகனமும் பறிமுதல் செய்யப்படும் என்றார்.

அதனை தொடர்ந்து, ‘ஹெல்மெட்’ அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்டி வந்தவர்களை பாராட்டும் வகையில் அவர்களுக்கு இனிப்பு, பேனா, சோப்பு டப்பா உள்பட பல்வேறு பரிசுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாண்டைராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் வசந்த், விஸ்வநாத், முருகன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Next Story