150 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது


150 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2017 4:30 AM IST (Updated: 11 Aug 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

மண்டபத்தில் 150 கிலோ கடல் அட்டைகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பனைக்குளம்,

மண்டபம் வடக்கு கடல் பகுதியில் நேற்று மண்டபம் கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜோதிபாசு, ராஜ்குமார் மற்றும் கடலோர போலீசார் பைபர் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடக்கு துறைமுக கடல் பகுதி அருகே ஒரு சிறிய மீன் பிடி படகில் ஒருவர் வந்து கொண்டிருந்தார்.

அந்த படகில் இறங்கி போலீசார் சோதனை செய்தபோது அதில் 20 மூடைகளில் தடை செய்யப் பட்ட 150 கிலோ கடல் அட்டைகள் இருப்பது தெரிய வந்தது. கடல் அட்டைகளை படகில் ஏற்றி வந்த மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த ஆசிப்அலி (வயது 36) என்பவரையும் கடலோர போலீசார் பிடித்தனர். கடல் அட்டைகளையும், படகையும் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் மீன் பிடித்து கரை திரும்பிய பல விசைப் படகுகளில் இருந்து கடல் அட்டைகளை மொத்தமாக பெற்று வந்ததும், கடல் அட்டை வியாபாரி ஒருவரிடம் கொடுக்க இருந்ததும் தெரியவந்தது.

பின்னர் அவரை, கடலோர போலீசார் மண்டபம் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆசிப்அலியை கைது செய்தனர். 

Related Tags :
Next Story