சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 15–ந் தேதி கிராமசபை


சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 15–ந் தேதி கிராமசபை
x
தினத்தந்தி 11 Aug 2017 4:17 AM IST (Updated: 11 Aug 2017 4:17 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் 15–ந் தேதி கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கலெக்டர் முத்து உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) முத்து விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

வருகிற 15–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சுதந்திர தினத்தையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளிலும் சுழற்சி முறையில் கிராமசபை கூட்டத்தை அனைத்து ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்தும், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் அந்தியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல் வேண்டும்.

திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், கழிப்பறை இல்லாதோர் விவரப்பட்டியல் சேகரித்தல், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், திடக்கழிவு மேலாண்மை திட்டம், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறைகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்தும் விவாதிக்க வேண்டும்.

ரே‌ஷன்கடைகளின் செயல்பாடுகள்

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல் வேண்டும். மகளிர் திட்டம், இதர பொருட்கள், அனைவருக்கும் கல்வி திட்டம், குழந்தை பாதுகாப்பு திட்டம், ரே‌ஷன்கடைகளின் செயல்பாடுகள், பொதுவினியோக திட்டத்தின் செயல்பாடுகள், ரே‌ஷன்கார்டுகளை ஆய்வு செய்தல் போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும்.

இந்த கிராமசபை கூட்டங்களுக்கு பிற துறைகளை சார்ந்த அலுவலர்களையும் கலந்து கொள்ள செய்து அவர்களது துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துரைக்க ஏற்பாடு செய்யவேண்டும். கிராமசபை கூட்டத்தில் பெருவாரியான மக்கள் பங்கேற்கும் பொருட்டு கிராம ஊராட்சிகளில் முழுமையான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் செய்து சிறப்பான முறையில் கிராமசபை கூட்டத்தை நடத்த அனைத்து ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் செய்யவேண்டும். கிராமசபை கூட்ட ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பார்வையிடவும், ஊராட்சி ஒன்றிய அளவில் உதவி இயக்குனர் நிலையில் மண்டல அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story