“டெங்கு கொசு ஒழிப்பு பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி


“டெங்கு கொசு ஒழிப்பு பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்” சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 11 Aug 2017 4:34 AM IST (Updated: 11 Aug 2017 4:34 AM IST)
t-max-icont-min-icon

“டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு ஒழிப்பு பணியை பொதுமக்கள் இணைந்து ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்“ என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் மர்ம காய்ச்சலுக்கு 7 பேர் பலியானார்கள். இதையடுத்து அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஓமலூர், காடையாம்பட்டி பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள், சுகாதாரப்பணிகளை தீவிரப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதன் தொடர்ச்சியாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று மீண்டும் ஓமலூர் வந்து ஆய்வு செய்தார். இதற்காக அவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருபவர்களை பார்வையிட்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும், அரசு ஆஸ்பத்திரி முன்பு இருக்கும் டீக்கடைக்கு சென்ற அவர், அங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு உள்ளதா? என பார்வையிட்டார்.

தீவிர கண்காணிப்பு

இதைத்தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் ஓமலூர் பேரூராட்சி அலுவலகம் அருகே கோவில் கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இருந்த தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு இருப்பதை பார்த்து, அந்த தண்ணீரை கீழே கொட்டினார். பின்னர் அரசு ஆஸ்பத்திரி, பஸ் நிலையம் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். இதையடுத்து சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கேரள மாநிலத்தையொட்டி உள்ள கோவை, ஈரோடு, சேலம் உள்பட 13 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த காய்ச்சல்களை கட்டுப்படுத்த மருத்துவர்கள் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 25 ஆயிரம் கொசு ஒழிப்பு பணியாளர்கள், 3,500 சுகாதார ஆய்வாளர்கள், 134 பூச்சியியல் வல்லுனர்கள் மற்றும் அரசு டாக்டர்கள் இல்லாத இடங்களில் மாற்று டாக்டர்களும் இந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்

நல்ல தண்ணீரில்தான் டெங்குவை பரப்பும் கொசு உற்பத்தியாகிறது. டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் இல்லை என்றாலும் தடுப்பு முறைகள் உள்ளன. இந்த கொசுகளை 21 நாட்களில் முழுவதும் அழிக்க முடியும். ஒட்டுமொத்த குழுவாக, அதாவது டாக்டர்கள், அரசு துறை அலுவலர்கள் ஒன்றிணைந்து பொதுமக்களின் தேவைகளை உள்வாங்கி செயல்பட்டு வருகின்றனர்.
என்றாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுகள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தேங்கும் தேங்காய்சிரட்டை, டயர், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். பொதுமக்கள் இணைந்து இப்பணியை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற பாடுபடவேண்டும்.

போலி டாக்டர்கள்

இலங்கையில் டெங்கு காய்ச்சலுக்கு 1 லட்சம் பேரும், கேரளாவில் 15 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. இன்னும் 10 நாட்களில் அனைத்து காய்ச்சல்களும் கட்டுப்படுத்தப்படும். பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை வாரம் ஒருமுறை சுத்தப்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் 416 நகர மருத்துவமனைகளில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு உள்ளது. 770 குழந்தைகளுக்கான வாகனங்கள் மூலம் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், மக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் போன்ற பணிகளும் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

சேலம் மாவட்டத்தில் பூட்டி உள்ள துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டு திறக்கப்படும். போதுமான டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஓமலூர் அரசு மருத்துவமனை நகரின் மையப்பகுதியில் உள்ளதால் இங்கு கூடுதல் கட்டிடம் மற்றும் படுக்கை வசதிகள், புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலி டாக்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது கொலை முயற்சி வழக்குகூட சில இடங்களில் பதியப்பட்டு உள்ளது. இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தரவேண்டும்.இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

காடையாம்பட்டி

இதையடுத்து ஓமலூரில் இருந்து காடையாம்பட்டி சென்ற அவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு வந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்களிடம், காய்ச்சல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார். அந்த குழந்தைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். மேலும், தீவட்டிப்பட்டி பகுதிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இந்த ஆய்வில் பொதுசுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் இயக்குனர் வளர்மதி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பூங்கொடி, சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத், ஓமலூர் வெற்றிவேல் எம்.எல்.ஏ., மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி, வட்டார மருத்துவ அலுவலர்கள் சந்தியா (ஓமலூர்), சாது பக்தசிங் (காடையாம்பட்டி) மற்றும் அ.தி.மு.க. (அம்மா அணி) ஒன்றிய செயலாளர்கள் பச்சியப்பன், அசோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story