குடற்புழு நீக்க மாத்திரைகள் 11½ லட்சம் பேருக்கு வழங்க இலக்கு


குடற்புழு நீக்க மாத்திரைகள் 11½ லட்சம் பேருக்கு வழங்க இலக்கு
x
தினத்தந்தி 11 Aug 2017 5:26 AM IST (Updated: 11 Aug 2017 5:26 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் 11½ லட்சம் பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் 11½ லட்சம் பேருக்கு வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க நாள் ஆகஸ்டு மாதம் 10–ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று வேலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில், காகிதப்பட்டறை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, வேலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநகராட்சி நகர்நல அலுவலர் மணிவண்ணன், பள்ளி தலைமை ஆசிரியை நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கண்மணி வரவேற்றார். நிகழ்ச்சியில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ், பள்ளி மாணவ– மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார். மாணவ–மாணவிகளிடையே மாத்திரைகள் மீதான பயத்தை போக்கும் விதமாக அவரும், அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் மாணவ–மாணவிகளின் முன்னிலையில் குடற்புழு நீக்க மாத்திரைகளை உட்கொண்டனர்.

அப்போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் பேசியதாவது:–

ஆண்டு தோறும் பிப்ரவரி, ஆகஸ்டு மாதங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் வேலூர் மாவட்டத்தில் குழந்தைகள், பள்ளி மாணவ– மாணவிகள் என 10 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து தற்போது ஆகஸ்டு மாதத்தில் மாவட்டம் முழுவதும் 11 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

2 வயது முதல் 19 வயது வரை உள்ளவர்கள் மாத்திரையை சாப்பிடலாம். அத்துடன் பெரியவர்களும் சாப்பிடலாம். இம்மாத்திரைகள் வேலூர் சுகாதார மாவட்டத்தில் உள்ள 1,449 அங்கன்வாடி மையங்கள், 1,288 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 446 தனியார் பள்ளிகள், 58 அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், திருப்பத்தூர் சுகாதார மாவட்டத்தில் 1,542 அங்கன்வாடி மையங்கள், 1,245 அரசு பள்ளிகள், 334 தனியார் பள்ளிகளிலும், 31 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் இத்திட்டத்தின் மூலம் மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகிறது.

இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, பசியின்மை, ரத்தசோகை, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி போன்றவை ஏற்படாது. உணவு சாப்பிட்டபின் மாத்திரைகளை உட்கொள்ளலாம். பள்ளி செல்லா குழந்தைகளுக்கும் மாத்திரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாத்திரைகளை சாப்பிட்டு உங்களது நண்பர்களிடமும் மாத்திரைகள் சாப்பிட சொல்ல வேண்டும். விடுபட்ட நபர்களுக்கு வருகிற 17–ந்தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story