கபடி... கபடி...!


கபடி... கபடி...!
x
தினத்தந்தி 12 Aug 2017 4:30 AM IST (Updated: 11 Aug 2017 3:52 PM IST)
t-max-icont-min-icon

ஒரே கிராமத்தை சேர்ந்த பெண்கள் கபடி வீராங்கனைகளாக இருப்பதுடன், மாநில, தேசிய அளவில் பதக்கங்கள் குவித்து, தங்கள் ஊரின் பெயரை உலகுக்கு பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அந்த ஊர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு..!

யல்வெளிகள் சூழ்ந்த அந்த அழகிய கிராமத்தில், வீடுகளை விட... கபடி மைதானங்களே அதிகமாக தென்படுகிறது. அத்தனை மைதானங்களிலும் பெண்களின் ஆட்டம் தூள் பறக்கிறது. ஆண்களுக்கு இணையாக விளையாடி... அசரடிக்கிறார்கள். தென்னமநாடு கிராமத்தை, கபடி கிராமமாக உருமாற்றிய பெருமை குலோத்துங்கனையே சாரும். ஏனெனில் தென்னம நாடு கிராமத்தில் வசிக்கும் பள்ளி, கல்லூரி மாணவிகளை கபடி விளையாட்டில் ஊக்கப்படுத்துவதுடன், தேசிய அளவிலான கபடி வீராங்கனைகளாகவும் உருமாற்றிவருகிறார். ‘கபடி... கபடி...’ என்று கானம் பாடும் குலோத்துங்கனை சந்தித்து பேசினோம். 

‘‘தென்னமநாட்டிற்கும், எனக்கும் 25 வருட பந்தம். ராமவிலாஸ் உயர்நிலை பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்ற, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பாக தென்னமநாட்டிற்கு வந்தேன். கிராமத்தின் அழகும், ஊர் மக்களின் பழக்க வழக்கமும் என்னை இங்கேயே தங்க வைத்துவிட்டது. தஞ்சாவூர் எப்போதுமே கபடி வீரர்களுக்குப் புகழ் பெற்றது. நானும் முதலில் பள்ளி மாணவர்களுக்குத்தான் பயிற்சி கொடுத்தேன். கபடி விளையாட்டில் அசத்தியதோடு, தேசிய அளவிலான கோப்பைகளையும் அவர்கள் வென்றுவந்தனர். அந்த சமயத்தில் தான் பள்ளி தலைமை ஆசிரியர், ‘‘இந்த காலத்து பெண்களுக்கு விளையாட்டிலும், உடல் ஆரோக்கியத்திலும் ஆர்வமே இல்லை. புத்தக புழுக்களாகவே இருக்கிறார்கள். அதனால் மாணவிகளுக்கும் கபடி பயிற்சி கொடுங்கள். விளையாட்டு வீராங்கனைகளுக்கு மேற்படிப்பிலும், அரசு வேலைகளிலும் சிறப்பு சலுகைகள் கிடைக்கும். அதோடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்’’ என்று யோசனை தெரிவித்தார். 

ஆரம்பத்தில் மிகச் சில மாணவிகளே கபடி விளையாட முன்வந்தனர். அதைக்கூட ஊர் மக்கள் விரும்பவில்லை. அந்த வெகு சில மாணவிகளுக்கு கடுமையான பயிற்சி கொடுத்தேன். அவர்கள் தமிழ்நாடு மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்றனர். அதைப் பார்த்து மற்ற பெற்றோர்களும் சம்மதிக்க... தென்னமநாடு கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் கபடி வீராங்கனைகள் உருவாக ஆரம்பித்தனர். மாநில, தேசியப் போட்டிகளில் வெற்றிபெற்று இன்று இந்திய அளவில் பிரபலமாகி உள்ளனர்’’ என்றார் பெரு மிதத்துடன்.

மாணவிகளின் நேர்த்தியான ஆட்டமும், தேசிய அளவிலான வெற்றிகளும் கிராம மக்களின் மனதை வெகுவாக மாற்றிவிட்டது. ‘கபடி’ என்றதும் கதவை சாத்திய கிராமவாசிகள் இன்று ஊர் முழுக்க கபடி மைதானத்தை அமைத்துக்கொடுத்திருக்கிறார்கள். மாரியம்மன் கோவில் மைதானம், ராமவிலாஸ் பள்ளி மைதானம், வயல்வெளிகளுக்கு நடுவே சிறுசிறு பயிற்சி மைதானம் என... கபடி மைதானங்கள், தென்னமநாட்டின் முகவரியாகவும் மாறிவிட்டன.  



தேசிய அளவிலான கபடிப் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற காவியா மற்றும் வெண்கலப்பதக்கம் பெற்ற திவ்யா இருவரும், “நாங்கள் கிராமத்துப் பெண் என்பதால், ஆரம்பத்தில் கால்சட்டை அணிந்துக்கொண்டு, பெரும் கூட்டத்திற்கு நடுவே கபடியாடத் தயக்கமாக இருந்தது. ஆனால், சீனியர் அக்காக்கள் விளையாடுவதை பார்த்துவிட்டு நாங்களும் ஆர்வமாக களத்தில் இறங்கினோம். அதனால் ஊரில் இப்போது பல தேசிய கபடி வீராங் கனைகள் இருக்கிறோம்!’’ என்றவர்கள்... சீனியர் கபடி வீராங்கனைகளையும் அறிமுகப்படுத்தினார்கள். அவர்களுள் சிந்தியா, பிரகதீஷ்வரி, பவித்ரா, ரதிபாரதி, கவுசல்யா... போன்றோர் தேசிய அளவில் சீறிப்பாயும் வீராங்கனைகள். அதில் பவித்ரா குறிப்பிடத்தக்கவர். இவர் இந்திய பெண்கள் அணியில் இடம்பிடித்ததுடன், ஈரானில் நடைபெற்ற சர்வதேச போட்டியிலும் சிறப்பாக விளையாடினார். அவர் தென்னமநாடு பற்றியும், சர்வதேச கபடி வாழ்க்கையை பற்றியும் பேசினார்.

‘‘ஊர் வழக்கமும், பள்ளி ஒழுக்கமும் என்னை கபடி பயிற்சிக்கு அழைத்து சென்றது. ஊர் திருவிழா, பள்ளி விழா, விடுமுறை கொண்டாட்டங்கள்... என எல்லா விசே‌ஷ நாட்களிலும் கபடி போட்டிகள் நடத்தப்படும் என்பதால் சிறுவயதிலிருந்தே விளையாட கற்றுக்கொண்டேன். சீனியர் அக்காக் களுக்கு காயம் ஏற்பட்டால் என்னை களம் இறக்கிவிடுவார்கள். இல்லையேல் ஆட்டத்தை வேடிக்கை பார்த்த திருப்தியோடு வீடு திரும்ப வேண்டியதுதான். இப்படி இருந்த கபடி வாழ்க்கை திடீரென வேகம் எடுத்தது. பள்ளி அணியில் சிறப்பாக விளையாடி... மாவட்ட அணிக்கு தேர்வாகினேன். பிறகு தமிழ்நாடு அணியில் விளையாட கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தி கொண்டதால்... இந்திய அணியில் இடம்பிடித்தேன். என்னுடன் பிரகதீஷ்வரி உட்பட பல தோழிகளும் தேசிய கபடி முகாமில் கலந்துகொண்டனர். அதில் எனக்கு மட்டும் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. ஈரானில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இந்திய அணிக்காக ‘கபடி’ கானம் பாடினேன். வீரமாக விளையாடியதற்கு புள்ளிகளும் கிடைத்தன. தென்னமநாடு கிராமத்தில் கற்றுக்கொண்ட உள்ளூர் வித்தைகள், சர்வதேச அரங்கில் கைக்கொடுத்தன’’ என்பவருக்கு... தற்போது ரெயில்வே துறையில் வேலை கிடைத்திருக்கிறது. 

‘சிறப்பாக விளையாடினால் அரசு வேலை நிச்சயம்’ என்ற குறிக்கோளும் தென்னமநாடு கிராம பெண்களை கபடி மைதானத்திற்கு அழைத்து வருகிறது. ஏனெனில் இந்த கிராமத்தில் இருக்கும் பெரும்பாலானோர் கபடி விளையாட்டின் மூலம் அரசு அதிகாரிகளாக மாறி உள்ளனர். ராணுவம், காவல்துறை, ரெயில்வே துறை, தபால்துறை... என அரசு துறைகளில் இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டை புரிந்துகொண்டு அதற்கேற்ப தங்களை தயார்படுத்திக்கொள்கிறார்கள்.

‘‘நன்றாக படிக்கும் மாணவர்களை விட, விளையாட்டு வீரர்–வீராங்கனைகளுக்கே சலுகைகள் அதிகம். ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’வில் படிப்பதே தனி மரியாதைதான். கல்லூரி படிப்பு முதல் விடுதி கட்டணம் வரை அனைத்துமே இலவசமாக கிடைத்துவிடும். படித்து முடித்த பிறகும் ‘ஸ்போர்ட்ஸ் கோட்டா’வை பயன்படுத்தி அரசு வேலைகளில் சேர்ந்துவிடலாம். அரசு அதிகாரியாக பணியாற்ற படிப்பும் அவசியம். விளையாட்டும் அவசியம். 



எங்கள் கிராமத்தில் அரசு அதிகாரிகள் அதிகம். அதற்கு ஊருக்குள் அமைந்திருக்கும் கபடி மைதானங்களே அடித்தளம். படிப்போடு, விளையாட்டையும் கற்றுக்கொள்ளுங்கள். அது நாட்டிற்கு பெருமையையும், வீட்டிற்கு வருமானத்தையும் பெற்றுத் தரும். அதை சரியாக புரிந்துகொண்டிருப்பதால் இன்று பொறுப்பான காவல் அதிகாரியாக பணியாற்றுகிறேன். அத்தோடு வருங்கால கபடி வீராங் கனைகளை உருவாக்கும் பொறுப்பையும் தோளில் சுமக்கிறேன்’’ என்று கூறும் சிந்தியா விளையாடினால் அரசு வேலையுடன், ஆரோக்கியமும் கிடைக்கும் என்கிறார்.

‘‘எங்க ஊர் பெண்கள் வெளியூர் போட்டிகளுக்குப் போகும்போது, நாங்களும் செல்வோம். பல் உடைந்து, காலில் அடிப்பட்டு சிரமப்பட்டாலும் இறுதியாக பதக்கமும், சிரிப்புமாகத்தான் வருவார்கள். அதனால் அவர் களது கபடி ஆர்வத்திற்கு தடைபோடுவதில்லை. மேலும் பெற்றோருக்கு செலவு வைக்காத விளையாட்டு இது. அதனால் பெண்கள் விரும்பும்வரை விளையாடட்டும் என்று விட்டுவிடுகிறோம்’’ என்கிறார்கள், கிராம பொதுமக்கள்!

 அதனால் தென்னமநாடு கிராமத்தில் காற்றைப் போலவே நிரந்தரமாகிக் கிடக்கிறது ‘கபடி’ பாட்டு.

Next Story