பண்ணாரி அருகே வாகனம் மோதி பெண் சிறுத்தை சாவு


பண்ணாரி அருகே வாகனம் மோதி பெண் சிறுத்தை சாவு
x
தினத்தந்தி 12 Aug 2017 3:45 AM IST (Updated: 12 Aug 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

பண்ணாரி அருகே வாகனம் மோதி பெண் சிறுத்தை இறந்தது.

பவானிசாகர்,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான யானை, சிறுத்தை, மான், குரங்குகள் உள்ளன.

பண்ணாரியில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூருக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை பவானிசாகர் வனப்பகுதி வழியாக செல்கிறது. அதனால் அவ்வப்போது யானை, சிறுத்தை போன்ற விலங்குகள் திடீரென ரோட்டை கடந்து செல்லும். அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் மெதுவாக செல்லவேண்டும் என்று வனத்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் பண்ணாரி சோதனை சாவடி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை ஒன்று காயங்களுடன் இறந்து கிடப்பதாக நேற்று காலை பவானிசாகர் வனச்சரகர் பெர்னாட்டுக்கு தகவல் கிடைத்தது. அவர் உடனே வன ஊழியர்களுடன் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார்.

நேற்று அதிகாலை சிறுத்தை ரோட்டை கடந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சிறுத்தை மீது மோதியதில் அது இறந்து கிடப்பது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி காராச்சிகொரையில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு கால்நடை டாக்டர் அசோகன் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். அதன்பின்னர் அவர் கூறும்போது, ‘இறந்தது சுமார் 3 வயதுடைய பெண் சிறுத்தை‘ என்றார். பின்னர் சிறுத்தையின் உடல் எரியூட்டப்பட்டது.

ஆசனூரில் கொள்ளேகால்பிரிவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேபோல் 5 வயதுடைய ஆண் சிறுத்தை ரோட்டை கடந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்துவிட்டது. அதன்பின்னர் மாவட்ட வன அதிகாரி பத்மா நடவடிக்கையின் பேரில் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வனவிலங்குகள் அடிக்கடி கடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டது. அதேபோல் சத்தி அடுத்துள்ள புதுவடவள்ளியில் இருந்து திம்பம் மலை அடிவாரம் வரை ரோட்டின் குறுக்கே வேகத்தடை அமைத்தால், வாகனங்களில் அடிபட்டு விலங்குகள் பலியாவது குறையும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Related Tags :
Next Story