டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
தாராபுரத்தில் சப்–கலெக்டர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தாராபுரம்,
தாராபுரம் தாலுகா குண்டடம் ஒன்றியம் நந்தவனப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது தும்பலப்பட்டி கிராமம். 200–க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வரும் இந்த கிராமத்தில் இதுவரை டாஸ்மாக் கடை எதுவும் கிடையாது. இந்தநிலையில் தற்போது, இந்த கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் முயற்சி எடுத்துவருகிறார்கள்.
இதற்காக தனியாருக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் தேர்வு செய்துள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் கடை அமைக்க கலால் துறையினர் தேர்வு செய்த இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய தும்பலப்பட்டிக்கு சென்ற போதுதான் அந்த பகுதி மக்களுக்கு டாஸ்மாக் கடை அமைய உள்ள விவரம் தெரியவந்துள்ளது.
அதன் பிறகு கிராம மக்கள் அதிகாரிகளைச் சந்தித்து டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். அதிகாரிகள் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இதையடுத்து நில உரிமையாளரிடம் சென்று இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை வந்தால், இங்குள்ள விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் பாதிக்கப்படுவார்கள். எனவே டாஸ்மாக் கடைக்கு இடம் தரவேண்டாம் என்று கிராம மக்கள் கேட்டுக்கொண்டனர்.
அவரும் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாததால், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நேற்று தாராபுரம் சப்–கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அங்கு அவர்கள், தங்கள் கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகையிட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த அதிகாரிகள், அங்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.