கோட்டூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்


கோட்டூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 Aug 2017 4:15 AM IST (Updated: 12 Aug 2017 1:08 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலைய திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார். நாகை கே.கோபால் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி, கோட்டூர் முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் வீ.ஜீவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இணை இயக்குனர் கே.கதிர்வேல் வரவேற்றார்.
விழாவில் அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி புதிய தொழிற்பயிற்சி நிலையத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை மற்றும் சீருடைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தில் கோட்டூரில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

நிதி ஒதுக்கீடு

கோட்டூர் பகுதியின் வளர்ச்சிக்கு இது ஒரு வித்தாகும். நன்னிலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல் பகுதிகளில் ஜெயலலிதா, கலைக்கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளை கொண்டு வந்தார். சட்ட போராட்டம் நடத்தி விவசாயிகளின் உரிமைகளை பெற்றுக்கொடுத்தவர் ஜெயலலிதா. அவரது வழியை பின்பற்றி சிறப்பாக ஆட்சி நடத்திவரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோட்டூர் பகுதி மாணவர்கள் தங்கி படிப்பதற்கு விடுதியுடன் கூடிய புதிய தொழிற்பயிற்சி நிலையம் அமைவதற்கு ரூ.9½ கோடி நிதி ஒதுக்கீடு செய்து கொடுத்தார். வாழ்க்கையில் முன்னேற கல்வி அவசியம் ஆகும். கல்வியால் நமது தலைமுறை முன்னேறும். விவசாயத்தை தொழிலாக கொண்ட குடும்பத்தில் பிறந்த இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் தொழிற்கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மன்னார்குடி உதவி கலெக்டர் செல்வசுரபி, கூட்டுறவு வங்கி தலைவர் ப.ராஜாசேட், ஒன்றிய ஆணையர்கள் வெங்கடேஸ்வரன், தேவராஜ், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் செல்வம், முன்னாள் வர்த்தக சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குழந்தையம்மாள் ராஜேந்திரன், பால் கூட்டுறவு சங்க இயக்குனர் தில்லையம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை திருச்சி மண்டல இயக்குனர் ஜான்போஸ்கோ நன்றி கூறினார்.

Next Story