சமூக வலைதளங்களில் பெண்கள் புகைப்படங்களை பதிவிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்


சமூக வலைதளங்களில் பெண்கள் புகைப்படங்களை பதிவிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Aug 2017 4:15 AM IST (Updated: 12 Aug 2017 2:00 AM IST)
t-max-icont-min-icon

சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களுடைய புகைப்படங்களை பதிவிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அரியலூர் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி கூறினார்.

தாமரைக்குளம்,

அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரி முதல்வர்(பொறுப்பு) சிற்றரசு தலைமை தாங்கினார். முகாமில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சுமதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள வீடுகளில் விட்டு செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளிடம் ‘குட் டச், பேட் டச்’ ஆகியவற்றை கூறி வளர்க்க வேண்டும். செல்போனில் பல்வேறு பயன்பாடுகள் இருந்தாலும், அதில் பல தீமைகளும் உள்ளன. பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரிப்புக்கு செல்போனும் முக்கிய காரணமாக உள்ளது.

பாலியல் புகார்கள்

சமூக விரோதிகள் பெண்களின் புகைப்படங்களை திருடி, மார்பிங் செய்து, தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பெண்கள் தங்களுடைய புகைப் படங்களை பதிவிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். செல்போனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பாலியல் புகார்களை தெரிவிப்பதன் மூலமாக குற்றவாளிக்கு தண்டனை கிடைக்கும். புகார்கள் கொடுக்காவிட்டால் குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்பித்து கொள்வார்கள். படிப்புடன் தனித்திறமையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதுவும் நமக்கு இறுதிவரை உறுதுணையாக இருக்கும். படிக்கும் காலத்திலேயே அடிப்படை சட்டங்களை மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் சார்பு நீதிபதி சரவணன் கலந்து கொண்டு பேசினார். வழக்கறிஞர்கள், இந்திய தண்டனை சட்டங்கள் குறித்து மாணவ, மாணவிகளிடம் விளக்கி பேசினார்கள். முடிவில் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Next Story