தனியார்-அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படும்


தனியார்-அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படும்
x
தினத்தந்தி 12 Aug 2017 4:00 AM IST (Updated: 12 Aug 2017 2:10 AM IST)
t-max-icont-min-icon

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்திட்ட கூடுதல் இயக்குனர் செல்வவிநாயகம் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திரு வாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கான தனியார் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு சுகாதாரத்திட்ட கூடுதல் இயக்குனர் செல்வவிநாயகம் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட மாவட்ட வருவாய் அதிகாரி சின்னம்மாள், இணை இயக்குனர் ஜெயசேகர், துணை இயக்குனர்கள் பரணிதரன், ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்பு தமிழ்நாடு சுகாதாரத்திட்ட கூடுதல் இயக்குனர் செல்வவிநாயகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்- அமைச்சர் காப்பீடு திட்டத்தில் தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் மக்களுக்கு ரூ.4 ஆயிரத்து 100 கோடி செலவில் மருத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் காப்பீடு திட்டத்தில் பொதுமக்களிடம் கூடுதலாக வசூலிக்கபட்ட 350 மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இனிவரும் காலங்களில் கூடுதலாக வசூலிக்கப் படும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுப்பதோடு வசூலிக்கபட்ட தொகையைவிட 5 மடங்கு தொகை அபராதமாக விதிக்கப்படும்.

செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி

பயனாளிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகையை சம்பந்தப்பட்ட மருத்துவமனை பயனாளிக்கு திரும்ப கொடுத்து, அதற்கான சான்றை சமர்பிக்க வேண்டும். பயனாளிகள் மருத்துவமனையில் காப்பீடு திட்டத்தில் சேரும் சமயத்தில் முன் அனுமதி படிவத்தில் அவர்களுடைய செல்போன் எண்ணை குறிப்பிட வேண்டும். அந்த செல்போன் எண்ணிற்கு அவர்களுக்கு காப்பீடு திட்டத்தில் மருத்துவம் செய்ய மருத்துவமனைக்கு எவ்வளவு தொகை முன் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என்ற குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. மேலும் அவர்களுடைய காப்பீட்டு குறிப்பு எண், அடையாள எண் மற்றும் குறைகள் இருந்தால் அழைக்க வேண்டிய 24 மணி நேர இலவச சேவை எண் ஆகியவையும் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படுகிறது.

மர்ம காய்ச்சலுக்கான முகாம்

தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு மருத்துவம் அளிக்கப் படும். தனியார் மருத்துவ மனைகளில் டெங்குகாய்ச்சல் அறிகுறியுடன் வருபவர்களுக்கு கணினி மூலம் உறுதிசெய்யப்பட்டு பொது சுகாதார அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி றது. அனைத்து மருத்துவ மனைகளிலும் மர்ம காய்ச்சலுக்கான முகாம் நடத்தப்பட்டு காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் கூடுதலாக வசூலிக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்தை மருத்துவமனைகளிடம் இருந்து திரும்ப பெறப்பட்டு, 17 பயனாளிகளுக்கு இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story