வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு மானியத்துடன் தொழில் கடன் உதவி


வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு மானியத்துடன் தொழில் கடன் உதவி
x
தினத்தந்தி 12 Aug 2017 3:45 AM IST (Updated: 12 Aug 2017 3:45 AM IST)
t-max-icont-min-icon

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு மானியத்துடன் தொழில் கடன் உதவி வழங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி,

படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் தமிழக அரசால் கடந்த 2010-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வரும் சிறந்த சுயவேலைவாய்ப்பு திட்டமாகும். இந்த திட்டம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அவர்களின் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் சிறு, குறு உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் தொடங்க வழியேற்படுத்தி கொடுப்பது, வேலைவாய்ப்பிற்காக இடம் பெயர்தலை தவிர்ப்பது மற்றும் வறுமை கோட்டில் உள்ளவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வாய்ப்பு ஏற்படுத்தி தருவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தை மேலும் சிறப்பாக செயல்படுத்தும் வகையில் எளிதாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஏதுவாக www.msmeonli-ne.tn.gov.in.uye-gp என்ற புதிய இணையதளம் தொடங்கப்பட்டு உள்ளது. நகர மற்றும் ஊரக பகுதிகள் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரையும், சேவை தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையும், வியாபார நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சமும் இந்த திட்டத்தின் கீழ் கடனாக வழங்கப்படும். திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். விவசாயம் மற்றும் விவசாயத்துடன் நேரடியான தொடர்புடைய பணிகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற இயலாது.

இந்த திட்டத்தில் கடன் பெற 18 வயது முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவினர் மற்றும் 45 வயது வரை உள்ள சிறப்பு பிரிவினர் விண்ணப்பிக்கலாம். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்திற்கு மேற்படாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரே அவர்களின் குடும்பத்தினரோ எந்த ஒரு வங்கியிலும் தவணை தவறிய கடன்தாரராக இருப்பவர்களும், ஏற்கனவே வேறு எந்த துறை மூலமாகவும் அரசு மானியத்துடன் கூடிய கடன் திட்டத்தில் பயன்பெற்றவர்களும், இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியற்றவர்கள்.

தொழில்முனைவோரின் பங்களிப்பாக திட்ட முதலீட்டில் 10 சதவீத தொகையினை பொதுப்பிரிவினரும், 5 சதவீத தொகையினை ஆதிதிராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர்,
மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வங்கியில் செலுத்த வேண்டும்.

தொழில்முனைவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிப்பதில் ஏற்படும் சந்தேகங்கள் தொடர்பாக விவரம் பெற தர்மபுரி மாவட்ட தொழில்மையத்தின் பொதுமேலாளரை அணுகலாம். மேலும் விவரங்கள் பெற 04342- 231081, 230892 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story