மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலி பணியிடங்கள் 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலி பணியிடங்கள் 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 Aug 2017 3:48 AM IST (Updated: 12 Aug 2017 3:48 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தர்மபுரி,

இதற்கு தகுதியுள்ளவர்கள் வருகிற 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காலியாக உள்ள 78 அங்கன்வாடி பணியாளர்கள், 249 குறு மைய அங்கன்வாடி பணியாளர்கள், 349 அங்கன்வாடி உதவியாளர்கள் காலி பணியிடங்களுக்கு முற்றிலும் தற்காலிக இனசுழற்சி முறையில் தகுதி வாய்ந்த திருமணமான பெண்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறுமைய அங்கன்வாடி பணியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

25 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மலைப்பகுதிகளில் வசிப்பவர்கள் 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்கலாம். மாற்றுத்திறனாளிகள் 25 வயது முதல் 38 வயது வரை உள்ளவர்களாக இருக்கலாம்.

அங்கன்வாடி உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். 20 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ளவர்களுக்கு 45 வயது வரை இருக்கலாம். மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்க அதிக பட்ச வயது வரம்பு 43 ஆகும். இதற்கான விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட விளம்பர பலகையில் வைக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பார்வையிட்டு அதன்படி விண்ணப்பத்தை தயார் செய்து விண்ணப்பதாரர்கள் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்துடன் பிறந்ததேதி, கல்வித்தகுதி, சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வருமான சான்றிதழ், ரேஷன்கார்டு ஆகியவற்றின் நகல்களோடு கணவரால் கைவிடப்பட்டவரென்றால் அதற்கான சான்றிதழை சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வருகிற 16-ந்தேதி(புதன்கிழமை) முதல் 26-ந்தேதி வரை சம்பந்தப்பட்ட வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிபணியிடங்களுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மூலம் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story