குன்றத்தூர் அருகே, மின்கம்பியில் உரசியதால் பஞ்சு மூட்டைகள் ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது


குன்றத்தூர் அருகே, மின்கம்பியில் உரசியதால் பஞ்சு மூட்டைகள் ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்தது
x
தினத்தந்தி 12 Aug 2017 4:20 AM IST (Updated: 12 Aug 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

புனேயில் இருந்து பஞ்சு மூட்டைகள் ஏற்றிவந்த கன்டெய்னர் லாரி, குன்றத்தூர் அருகே மின்கம்பியில் உரசி தீப்பிடித்து எரிந்தது.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த வழுதழம்பேடு பகுதியில் சந்தோஷ் சயனி என்பவருக்கு சொந்தமான பஞ்சு மெத்தை கம்பெனி உள்ளது. இங்கு பஞ்சு மெத்தைகள், சோபாக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த கம்பெனிக்கு மராட்டிய மாநிலம் புனேயில் இருந்து பஞ்சு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு கன்டெய்னர் லாரி வந்துகொண்டிருந்தது. இருங்காட்டுக்கோட்டை வழியாக ஸ்ரீபெரும்புதூர்–குன்றத்தூர் சாலையில் குன்றத்தூர் நோக்கி நேற்று அந்த லாரி வந்துகொண்டு இருந்தது.

மின்கம்பியில் உரசியது

குன்றத்தூரை அடுத்த சிறுகளத்தூர் அருகே லாரி வந்தபோது மேலே சென்ற மின்சார கம்பியில் கன்டெய்னரின் மேல் பகுதி உரசியது. இதில் கன்டெய்னரில் இருந்த பஞ்சு மூட்டைகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. லாரி சென்ற வேகத்தில் தீ மளமளவென பஞ்சு மூட்டைகள் முழுவதும் பரவியது.

இதை கவனிக்காமல் கன்டெய்னர் லாரியை டிரைவர் தொடர்ந்து ஓட்டிச்சென்றார். கன்டெய்னரில் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்ட அந்த பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் டிரைவரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி கன்டெய்னரின் கதவை திறந்து பார்த்தார்.

டிரைவர் ஓட்டம்

கன்டெய்னருக்குள் இருந்த பஞ்சு மூட்டைகள் தீயில் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். டிரைவரும் அருகில் இருந்தவர்களும் சில பஞ்சு மூட்டைகளை வெளியே எடுத்து போட்டனர். ஆனால் தீ அதிக அளவில் எரிந்துகொண்டு இருந்ததால் அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

கன்டெய்னரில் இருந்து கரும்பு புகை வெளியேறி அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் பயந்துபோன லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தீயில் எரிந்து நாசம்

இதுபற்றி தகவல் அறிந்ததும் பூந்தமல்லி, தாம்பரம், இருங்காட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் கன்டெய்னரில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் தீயணைப்பு வாகனங்களில் இருந்த தண்ணீர் தீர்ந்துபோனதால் மீண்டும் சென்று தண்ணீர் எடுத்துவர சற்று தாமதம் ஆனது. தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி கன்டெய்னர் லாரியில் எரிந்த தீயை அணைத்தனர். அதற்குள் கன்டெய்னர் லாரியும், அதில் இருந்த பஞ்சு மூட்டைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தால் குன்றத்தூர்–ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலையில் செல்ல வேண்டிய கன்டெய்னர் லாரி, குடியிருப்புகள் மிகுந்த இந்த சாலையில் வந்ததால் தான் தீ விபத்து ஏற்பட்டதாகவும், கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story