மானாமதுரையில் பயிர் காப்பீடு வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பயிர் காப்பீடு வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மானாமதுரை,
தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை வழங்க நியமிக்கப்பட்ட தனியார் காப்பீட்டு நிறுவனம் திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளை ஏமாற்றிய நிறுவனம் என்றும், அதனை இங்கு நியமிக்கக்கூடாது என்று விவசாயிகள் அப்போதே எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் சிவகங்கை மாவட்டத்திலும் அதே காப்பீட்டு நிறுவனத்திற்கு ரூ.265 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் மானாமதுரை வட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் வெறும் 6 சதவீத பேருக்கு மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கிவிட்டு, மீதி தொகையை அந்த நிறுவனம் முறைகேடு செய்துவிட்டதாக கூறப்படுகிறது. மானாமதுரை தாலுகாவில் தெ.புதுக்கோட்டை, மேலநெட்டூர், புக்குளம், கணபதியேந்தல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயம் பொய்த்து, செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. இதனால் வேதனையடைந்த சில விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கு முழுமையாக பணத்தை வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை வழங்க வலியுறுத்தி மானாமதுரை தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் ஆண்டி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் வீரபாண்டி முன்னிலை வகித்தார். ஜெயராமன், முன்னாள் கவுன்சிலர் பாலசுப்ரமணியன் மற்றும் விவசாயிகள் பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.