மண்டபம் அருகே உயிருடன் கரை ஒதுங்கிய புள்ளி சுறா மீண்டும் கடலில் விடப்பட்டது
மண்டபம் அருகே வேதாளை கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய புள்ளி சுறா மீண்டும் கடலில் விடப்பட்டது.
பனைக்குளம்,
மண்டபம் அருகே வேதாளை கடற் ரையில் நேற்று மாலை 6 மணிக்கு சுமார் 10 அடி நீளமும் 150 கிலோ எடையுள்ள உயிருடன் ஒரு புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கியது இது பற்றி அப்பகுதியை சேர்ந்த மீனவர்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறையினர் புள்ளி சுறாவை பார்வையிட்டனர்.
இது பற்றி வனச்சரகர் சதீஷ் கூறியதாவது:– வேதாளை கடற்கரையில் உயிருடன் சுமார் 150 கிலோ எடையும் 10 அடி நீளமும் கொண்ட புள்ளி சுறா ஒன்று கரை ஒதுங்கியது. இந்த சுறாவின் உடலில் எங்கும் எந்த காயமும் இல்லை.பெண் இனத்தை சேர்ந்த இந்த சுறா பிறந்து 5 வருடங்கள் இருக்கும்.
மீனவர்கள்,வேட்டை தடுப்பு காவலர்கள் உதவியுடன் மீன் பிடி நாட்டுப்படகு மூலம் கயிறு கட்டி புள்ளி சுறாவை மீண்டும் நடுக் கடலில் விட்டுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார். வேதாளை கடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கிய புள்ளி சுறாவை காண அப் பகுதியை சேர்ந்த ஏராளமான மீனவர்களும், குழந்தைகளும் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.