கள்ளிக்குடியில் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் உதயகுமார் வழங்கினார்
கள்ளிக்குடியில் நடந்த அம்மா திட்ட முகாமில் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.
மதுரை,
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியில் அம்மா திட்ட முகாம் நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு அனைத்து துறை சார்பிலும் பல்வேறு திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை திறந்து வைத்தார். பின்னர் கள்ளிக்குடி ஒன்றிய குடியிருப்பு பகுதியில் மரக்கன்றுகளை நட்டார்.
இதில் கலெக்டர் வீரராகவராவ், அரசு செயலாளர் சந்திரமோகன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதைதொடர்ந்து அமைச்சர் முகாமில் 770 பேர்களுக்கு ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும் போது கூறியதாவது:–
அம்மா திட்ட முகாமை புதிய வடிவில் தொடங்க முடிவு செய்து, அதனை கள்ளிக்குடியில் முதலில் தொடங்கியுள்ளோம். இதுவரை அம்மா திட்ட முகாமில் 60 லட்சம் பயனாளிகள் மனு கொடுத்து அதற்கான தீர்வு காணப்பட்டது. மேலும் 15 வகையான சான்றிதழ்களை ஆன்லைன் மூலமாக தருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் ஆசிரம மேல்நிலைப்பள்ளியில் உசிலம்பட்டி கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில் கலெக்டர் ஒலிம்பிக்கொடி ஏற்றி வைத்தார். அமைச்சர் தேசியகொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்று போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் கல்வி மாவட்ட அளவில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. புறநகர் மாவட்ட செயலாளர் ராஜன்செல்லப்பா, எம்.எல்.ஏக்கள் ஏ.கே.போஸ், நீதிபதி, புறநகர் மாவட்ட துணை செயலாளர் அய்யப்பன், கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம், டி.கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி, டி.கல்லுப்பட்டி பேரூராட்சி முன்னாள் தலைவர் மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.