பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது


பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது
x
தினத்தந்தி 13 Aug 2017 4:30 AM IST (Updated: 13 Aug 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

நம்பியூர்,

நம்பியூர் அருகே கெடாரையை சேர்ந்தவர் தேவராஜ். இவர் கடந்த 1-ந் தேதி நம்பியூர் பஸ்நிலையம் பின்புறம் நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் தேவராஜை மறித்தார்கள். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து 1500 ரொக்கப்பணம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றுவிட்டார்கள்.

இதுபற்றி தேவராஜ் உடனடியாக நம்பியூர் போலீசில் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து அன்று நம்பியூர் அருகே உள்ள பவுர்ஹவுஸ் மேடு என்ற இடத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் சந்தேகப்படும் படி ஒரு வாலிபர் அங்கு வந்தார். அதனால் போலீசார் அவரை பிடித்து விசாரித்தார்கள். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் பிடிபட்டவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் நம்பியூரை சேர்ந்த சண்டி என்கிற கருப்புசாமி என்பதும். அவர் புளியம்பட்டி காராப்பாடியை சேர்ந்த செந்தில் (37) என்பவருடன் சேர்ந்து தேவராஜிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் சண்டியை கைது செய்தார்கள். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய செந்தில்குமாரை வலைவீசி தேடி வந்தார்கள்.

இந்தநிலையில், நேற்று முன்தினம் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காயத்ரி குருமந்தூர்ரோடு என்ற இடத்தில் வாகனசோதனையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது செந்தில்குமார் அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தார். அவருடைய புகைப்படம் ஏற்கனவே போலீசாரிடம் இருந்ததால் உடனடியாக அவரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில், செந்தில்குமார் நம்பியூர், கடத்தூர், கோபி உள்ளிட்ட பல இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டதும். அவர் மீது ஏற்கனவே 4 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரை கோபி 2-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள். மாஜிஸ்திரேட்டு பழனிவேல் செந்தில்குமாரை கோபி மாவட்ட சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story