பெங்களூருவில், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்


பெங்களூருவில், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்
x
தினத்தந்தி 13 Aug 2017 3:44 AM IST (Updated: 13 Aug 2017 3:44 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், சுதந்திர தினவிழாவையொட்டி முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில், சுதந்திர தினவிழாவையொட்டி முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் நிறுத்தும் இடங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பெங்களூரு மானேக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் வருகிற 15–ந் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும் போலீசாரின் அணிவகுப்பு மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது. இதனால் சுதந்திர தினவிழாவைக் காண மானேக்ஷா மைதானத்திற்கு முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமானவர்கள் திரண்டு வருவார்கள். அவ்வாறு வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தும் இடங்கள், எந்த வழியாக மைதானத்திற்குள் வர வேண்டும் என்பது பற்றி போக்குவரத்து போலீசாரால் அறிவிக்கப்பட்டு உள்ளது.

அத்துடன் விழாவை முன்னிட்டு முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு உள்ளன. அதுபற்றிய விவரம் வருமாறு:–

சுதந்திர தின விழாவை காண்பதற்காக கார்களில் வெள்ளை நிற அட்டையுடன் வருபவர்கள் மைதானத்தின் மேற்கு பகுதியில் காரை நிறுத்திவிட்டு, 2–வது நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல வேண்டும். மஞ்சள் நிற அட்டையுடன் வருபவர்கள், கப்பன் பார்க் சாலை வழியாக மானேக்ஷா மைதானத்தின் 1–வது நுழைவு வாயில் வழியாக மைதானத்திற்குள் நுழைந்து, பின்னர் மைதானத்தின் வடமேற்கு பகுதியில் கார்களை நிறுத்த வேண்டும். இதுபோன்று இளஞ்சிவப்பு நிற அட்டையுடன் வாகனங்களில் வருபவர்கள், கப்பன் ரோட்டின் இருபுறங்களிலும் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.

இளஞ்சிவப்பு நிற அட்டை வைத்திருப்பவர்கள் மைதானத்தின் 3–வது நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்லலாம். பச்சை நிற அட்டை வைத்திருப்பவர்கள் மைதானத்தின் 4–வது மற்று 5–வது நுழைவு வாயில் வழியாக உள்ளே வர வேண்டும். கலை நிகழ்ச்சிகள், அணிவகுப்பில் கலந்துகொள்பவர்களை மைதானத்திற்கு வாகனத்திற்குள் அழைத்து வந்து, 1–வது நுழைவு வாயிலில் இறக்கி விட வேண்டும். அதன்பிறகு, அந்த வாகனங்களை எம்.ஜி.ரோடு, அனில்கும்பிளே சர்க்கிள், மெட்ரோ ரெயில் நிலைய பகுதிகளில் வடக்கு புறமாக நிறுத்த வேண்டும்.

அரசு வாகனங்களில் வருபவர்கள் கப்பன் ரோடு வழியாக மைதானத்தின் 1–வது நுழைவு வாயில் வழியாக உள்ளே வர வேண்டும். அரசு வாகனங்களை கப்பன் ரோட்டில் நிறுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோல இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மைதானத்தின் கிழக்கு பகுதியில் இருக்கும் காமராஜர் சாலையில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டும். பின்னர் அவர்கள் மைதானத்தின் 4 மற்றும் 5–வது நுழைவுவாயில் வழியாக உள்ளே வர வேண்டும். கார்களுக்கான அட்டை பெறாதவர்கள் காமராஜர் சாலையில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் காரை நிறுத்திவிட்டு, மைதானத்தின் 4 மற்றும் 5–வது நுழைவு வாயில் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுதந்திர தினவிழாவை காணவரும் பொதுமக்கள் தங்களது கார் மற்றும் இருசக்கர வாகனங்களை சிவாஜிநகரில் உள்ள பி.எம்.டி.சி. பஸ் நிலையத்தின் மாடியிலும், கன்டீரவா விளையாட்டு மைதானத்திலும், சபீனா பிளாசா கட்டிடத்திலும் நிறுத்தி வைக்க ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு காமராஜர் ரோட்டில் உள்ள 4 மற்றும் 5–வது நுழைவு வாயில் வழியாக மைதானத்திற்குள் வரலாம்.

சுதந்திர தினவிழாவையொட்டி வருகிற 15–ந் தேதி காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை கப்பன்ரோடு, எம்.ஜி.ரோடு, அனில்கும்பிளே சர்க்கிள், சென்ட்ரல் தெரு ஜங்‌ஷன், காமராஜர் ரோடு, பி.ஆர்.வி. ஜங்‌ஷன் மற்றும் மானேக்ஷா மைதானத்தை சுற்றி இருக்கும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் அந்த முக்கிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தவும் தடை செய்யப்பட்டு உள்ளது.

மானேக்ஷா மைதானத்தை சுற்றி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும், பாதுகாப்பு பிரச்சினைகளை கருத்தில் கொண்டும் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றமும், வாகனங்கள் நிறுத்த தடையும் விதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கும்படியும் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

இதற்கிடையில், சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15–ந் தேதி பெங்களூருவில் மதுபானம் விற்பனை செய்யவும், மதுக்கடைகள் திறந்திருக்கவும் போலீஸ் கமி‌ஷனர் சுனில்குமார் தடை விதித்துள்ளார். அன்றைய தினம் காலை 6 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணிவரை பெங்களூரு நகரில் உள்ள அனைத்து மதுக்கடைகள், பார்களை திறக்கவும், மதுபானங்கள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story