சீராக குடிநீர் வழங்கக்கோரி அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


சீராக குடிநீர் வழங்கக்கோரி அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 13 Aug 2017 4:30 AM IST (Updated: 13 Aug 2017 3:46 AM IST)
t-max-icont-min-icon

சீராக குடிநீர் வழங்கக்கோரி அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டார்.

அந்தியூர்,

அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது நகலூர் ஊராட்சி. இங்குள்ள நகலூர்புதூர் பொதுமக்களுக்கு தெருக்குழாய் வழியாக 5 நாட்களுக்கு ஒரு முறை பவானி ஆற்று தண்ணீரும், 2 நாட்களுக்கு ஒரு முறை ஆழ்குழாய் குடிநீரும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

இதுபற்றி அந்த பகுதி பொதுமக்கள் நகலூர் ஊராட்சி மற்றும் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்து வந்தார்கள். ஆனால் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாணவில்லை என்று தெரியவருகிறது.

இந்தநிலையில் நேற்று காலை நகலூர்புதூரை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு சென்று, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றார்கள். அதன்பின்னர் அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (கிராம ஊராட்சி) மகேஸ்வரி போலீசாருடன் இணைந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறும்போது, ‘கடந்த 6 மாதமாக சீராக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. 2 நாட்களுக்கு ஒரு முறை அரைமணி நேரம் மட்டும் தண்ணீர் வந்தால் நாங்கள் எப்படி பயன்படுத்துவது‘? என்றார்கள்.

அதற்கு ஆணையாளர் மகேஸ்வரி உடனடியாக நகலூர்புதூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதை ஏற்றுக்கொண்டு முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றார்கள்.


Next Story