ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் எதிரொலி; நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் காகித கோண் நிறுவனங்கள்


ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் எதிரொலி; நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் காகித கோண் நிறுவனங்கள்
x
தினத்தந்தி 13 Aug 2017 6:00 AM IST (Updated: 13 Aug 2017 4:09 AM IST)
t-max-icont-min-icon

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் எதிரொலி; நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் காகித கோண் நிறுவனங்கள் விற்பனை கடும் பாதிப்பு

குடிமங்கலம்,

தமிழகத்தில் தொழில்துறையில் வளர்ந்துவரும் நகரம் திருப்பூராகும். திருப்பூர் மாவட்டத்தில் தென்மாவட்டங்கள் மட்டுமின்றி, பிற மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். பின்னலாடை துறை ஆண்டுதோறும் சுமார் ரூ.27 ஆயிரம் கோடிக்கு அன்னிய செலவாணியை ஈட்டி தருகிறது.

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் நூற்பாலைகள், பின்னலாடை, விசைத்தறி, கைத்தறி என்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆலைகள் உள்ளன. இந்தியாவில் ஜவுளி வர்த்தகத்தில் தமிழகத்தின் பங்கு 35 சதவீதமாக உள்ளது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஜவுளித்துறை நசிவடைந்து வருகிறது. குறிப்பாக காகித கோண் தயாரிப்பு தொழில் மிகவும் நசிந்து வருகிறது.

ஜவுளி தொழிலுக்கு மிகவும் தேவையான நூல், காகித கோண் மற்றும் உருளைகளில் தான் சுற்றி வைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட காகித கோண் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

இந்த தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகிறார்கள். தற்போது காகித கோண்களின் விற்பனை குறைந்து வருவதால் கோண் தயாரிக்கும் சிறிய நிறுவனங்கள் நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றன.

காகித கோண் தயாரிப்பு குறித்து ஆலை உரிமையாளர் செல்வராஜ் கூறியதாவது:–

நூற்பாலைகளுக்கு தேவையான காகித கோண் தயார் செய்யும் பணியில் தமிழகத்தில் 300–க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. கோண் தயாரிப்பதற்கு 120 ஜி.எஸ்.எம்.–க்கு அதிகமான கிராப்ட் போர்டு என்ற காகிதம் பயன்படுத்தப்படுகிறது.

1 டன் கிராப்ட் போர்டு விலை ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரத்து 500 ஆக உயர்ந்துள்ளது. கிராப்ட் போர்டு விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மடங்க உயர்ந்துள்ளது. 1 டன் கிராப்ட் போர்டில் இருந்து அதிகபட்சமாக 15 ஆயிரம் கோண்கள் தயாரிக்க முடியும். 50 கிராம் எடை கொண்ட 4 டிகிரி, 5 டிகிரி என்ற இரு வகையான காகித கோண்கள் தயாரிக்கிறோம்.
கூடுதல் வரி விதிப்பு

தற்போது ஒரு கோண் ரூ.2.60 முதல் ரூ.2.70 வரை விற்கப்படுகிறது. கிராப்ட் போர்டு விலை பல மடங்கு உயர்ந்துள்ளது ஒருபுறம் என்றால், கிராப்ட் போர்டு காகிதத்துக்கு 5 சதவீதமாக இருந்த வாட் வரி தற்போது ஜி.எஸ்.டி. விதிப்பால் 12 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும் போர்டில் இருந்து தயாரிக்கப்படும் கோணுக்கு 6 சதவீத வரிவிதிக்கப்படுகிறது.

மொத்தத்தில் 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வரிவிதிப்பால் 13 சதவீதம் முதலீடு அதிகரித்துள்ளது. மாதம் ஒன்றுக்கு ரூ.18 ஆயிரம் வரை வரி செலுத்தியவர்கள் தற்போதைய வரி விதிப்பின்படி, ரூ.58 ஆயிரம் வரி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இது சிறு, குறு நிறுவனங்களை பெரிதும் பாதித்துள்ளது.

ஏற்கனவே நெருக்கடியில் சிக்கித்தவித்துக்கொண்டிருந்த கோண் தயாரிப்பு நிறுவனங்கள் கூடுதல் வரி விதிப்பின் காரணமாக முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிகளின் கடன் பெற்று தொழில் செய்து வரும் சிறு, குறு நிறுவனங்கள், வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டு கோண் தயாரிப்பு தொழிலை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

தற்போது கோண் விற்பனை குறைந்து உள்ளதால், கோண் தயாரிப்பு நிறுவனங்களில் கோண்கள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் கிராப்ட் போர்டு நிறுவனங்களே ஊதிய அடிப்படையில் கோண் தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டுள்ளதால் சிறு, குறு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story