கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: மின்னல் தாக்கி மீனவர் பலி


கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை: மின்னல் தாக்கி மீனவர் பலி
x
தினத்தந்தி 13 Aug 2017 4:45 AM IST (Updated: 13 Aug 2017 4:23 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கி மீனவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர்,

கோடை வெயிலுக்கு பிறகும் கடலூரில் வெயிலின் தாக்கம் நீடித்தது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதும் வெயிலின் தாக்கம் தணியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில், வெப்பச் சலனம் மற்றும் வளிமண்டலத்தின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சியின் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்தது. அந்த வகையில், கடலூரில் கடந்த 3 நாட்களாக பகலில் வெயிலும், இரவில் இடி-மின்னலுடன் பலத்த மழையுமாக இருந்து வருகிறது. நேற்று 4-வது நாளாக மழை நீடித்தது.

அதிகாலை 2 மணிக்கு இடி-மின்னலுடன் திடீரென மழை பெய்தது. முதலில் லேசான தூறலுடன் பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டித் தீர்த்தது. சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கியது. இதனால் பூமி குளிர்ந்து வெப்பம் தணிந்து காணப்பட்டது.தொடர்ந்து 4 நாட்களாக மழை பெய்ததால் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால் அந்த பகுதி சேறும், சகதியுமாக மாறியது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். அதன்விவரம் வருமாறு:-

பரங்கிப்பேட்டை அருகே உள்ள அகரம் பு.மானம்பாடியை சேர்ந்தவர் ஜம்புலிங்கம் மகன் குட்டியாண்டி (வயது 45), மீனவர். இவரும் அகரம் புதுப்பேட்டை உப்புக்காரத்தெருவை சேர்ந்த துரை மகன் நடராஜன்(40) என்பவரும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் கட்டு மரத்தில் சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அவர்களை மின்னல் தாக்கியது. இதில் குட்டியாண்டி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நடராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.இந்த சம்பவம் பற்றி அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் வெற்றாற்று பகுதிக்கு விரைந்து வந்து குட்டியாண்டி உடலை பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story